Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியாவில் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த விரும்பும் ஆளும் கூட்டணி

வாசிப்புநேரம் -

2023ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் வரவுசெலவுத் திட்ட அறிக்கை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில்  வெளியிடப்படவிருக்கிறது. 

வரவுசெலவுத் திட்டம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும்.

வரவுசெலவுத் திட்டம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவது, நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள். 

முன்னாள் பிரதமர் நஜிபின் வழக்கு முடிவும் இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

மலேசியாவில் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த விரும்பும் Barisan Nasional

மலேசிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் பிரதமர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

நஜிபுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் மலேசியாவை 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆட்சி புரிந்த Barisan Nasional எனும் தேசிய முன்னணிக் கூட்டணியை மக்கள் நிராகரித்தார்கள். 

இதற்கு 1MDB ஊழலும் நஜிப் சம்பந்தப்பட்ட SRC International விவகாரமும் முதன்மைக் காரணமாக அமைந்தன என்கிறார் அரசியல் பார்வையாளர் அன்புமணி பாலன்.


"2013-இலிருந்து 2018ஆம் ஆண்டுவரை தேசிய முன்னணி அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்வைத்தது. ஆனால், 1MDB விவகாரத்தை மட்டுமே மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அவை அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றன"

என்றார் அன்புமணி பாலன்.

1MDB விவகாரத்தை இம்முறையும் பேசும் பொருளாகப் பயன்படுத்த முடியாது. 

அதனால் இப்போதே தேர்தலை நடத்திவிடுவது சிறப்பு எனக் கூட்டணியை வழிநடத்தும் அம்னோ கட்சி நினைக்கிறது என்றார் மூத்த செய்தியாளர் பிஆர் ராஜன்

5 ஆண்டுகளில் 3 பிரதமர்கள்... இஸ்மாயில் சப்ரி நிலைப்பாரா? 

2018-ஆம் ஆண்டிலிருந்து மூவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

  • திரு. மகாதீர் முகமது

2018ஆம் ஆண்டுத் தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.  2020ஆம் ஆண்டில் அவர் பதவி விலகியதால் கூட்டணி கவிழ்ந்தது.

  • திரு. முஹிதின் யாசின்

Perikatan Nasional எனும் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டு முஹிதின் யாசின் (Muhyiddin Yassin) பிரதமரானார். 

அடுத்த ஓராண்டில் அவருக்கான ஆதரவு மீட்டுக் கொள்ளப்பட்டது.

திரு. இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 

-- அம்னோவைச் சேர்ந்த திரு. இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) பிரதமராகப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அவரின் தலைமைத்துவத்தின் கீழ் மலாக்கா மாநிலத் தேர்தலிலும் ஜொகூர் மாநிலத் தேர்தலிலும் தேசிய முன்னணி மகத்தான வெற்றியைப் பெற்றது. 

அவரின் தலைமையில் பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தேசிய முன்னணி தயாராகிவிட்டது போல இருக்கின்றது என்கிறார் பிஆர் ராஜன்.

"நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அம்னோவின் தலைவர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி எதிர்நோக்கும்  (Ahmad Zahid Hamidi) வழக்கு விசாரணையின் முடிவு அக்டோபர் மாதம் தெரியவரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது"

"இஸ்மாயில் சப்ரிதான் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது"

என்று பிஆர் ராஜன் கூறினார்.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மகத்தான சலுகைகளை அறிவித்த பிறகு தேர்தலை எதிர்கொள்ளத் தேசிய முன்னணி தயாராகவிருக்கின்றது என அரசியல் கவனிப்பார்கள் எண்ணுகின்றனர். 

இதனால் நவம்பர் மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் நடக்குமெனக் கருத்து நிலவுகிறது.

மலேசியாவில் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் நடைபெறவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்