Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

‘இப்படியொரு வெள்ளத்தைக் கண்டதில்லை, ஏறக்குறைய அனைத்தையும் இழந்து விட்டோம்' - கண்ணீரில் மலேசிய மக்கள்

‘இப்படியொரு வெள்ளத்தைக் கண்டதில்லை, ஏறக்குறைய அனைத்தையும் இழந்து விட்டோம்' - கண்ணீரில் மலேசிய மக்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் பெய்த அடைமழையைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிலாங்கூர், பஹாங், கிளந்தான், திரங்கானு, மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக் ஆகிய மாநிலங்கள், பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் சிலாங்கூர், பஹாங் மாநிலங்களில் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

வெள்ளத்தில் உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்டோம், உயிரை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடிந்தது என்று கண்ணீர் மல்கக் கூறினார், சிலாங்கூரின் பண்டார் புத்ரி கிள்ளானில் (Bandar Puteri Klang) வசிக்கும் திருமதி. பாமாய் பரமேஸ்வரி.

தற்போது வெள்ளம் சிறிது வடிந்துள்ளது. ஆயினும் சாலைகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. உணவுப் பொருட்களை வாங்கக் கூட வெளியில் செல்ல முடியவில்லை

எனக் கூறி கண் கலங்கினார் திருமதி.பாமாய்.

இதனிடையே இந்தளவுக்கு மோசமான வெள்ளத்தை வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை எனக் கூறுகிறார் சிலாங்கூர், பாலாகோங் (Balakong)கில் வசிக்கும் திருமதி. S.விக்னேஸ்வரி.

கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்றதொரு பேரிடரைப் பார்த்ததில்லை எனக் கூறினார், கிள்ளானின் மேரு (Meru) பட்டணத்தில் வசிக்கும் திரு.முரளி.

முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்த அனைவரையும் பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவிட்டதாக அவர் சொன்னார்.

வெள்ளம் வடியாததால் இன்னும் வீடு திரும்பவில்லை. அனைத்துப் பொருட்களும் சேதமாகி விட்டன. இனி ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது, வெள்ள பயம் நிச்சயம் ஏற்படும்

எனக் கூறி கண் கலங்கினார் திரு.முரளி.

இவ்வேளையில் வீடு வெள்ளத்தில் மூழ்கிய சமயத்தில் பள்ளிவாசல் தரப்பினர், அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டியதை ஒருபோதும் மறக்க முடியாது என்றார் ஆசிரியையான திருமதி.மேனகா பாலு.



எங்கள் குடியிருப்புப் பகுதி ஏரிக்கு அருகே அமைந்துள்ளதால் அடைமழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் மட்டுமே நீர் வழிந்தோடும். வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது கிடையாது

அக்கம் பக்கத்தினர், பள்ளிவாசல் அதிகாரிகள் என அனைவரும் உணவுப் பொருட்களை வழங்கி அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொண்டனர். இது மிகவும் போற்றுதலுக்குரிய ஒரு செயல்

என்றார் ஆசிரியை மேனகா.

இம்முறை ஏற்பட்ட வெள்ளம், கடந்த 50 ஆண்டுகளில் காணாத மிக மோசமான பேரிடராகக் கருதப்படுகிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கும் வேளையில், பொருள்களையும் இழந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் மக்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்