Skip to main content
'மகாதீரின் தோல்வி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா exclusive

'மகாதீரின் தோல்வி - மூத்த அரசியல்வாதிகள் இளையர்களுக்கு வழிவிடவேண்டும் என்பதைக் குறிக்கின்றது' - அரசியல் கவனிப்பாளர்

வாசிப்புநேரம் -

வெற்றி தோல்வி சகஜம் என்பார்கள்.

ஆனால் மலேசியத்தேர்தல் வரலாற்றில் இம்முறை சில முக்கியத் தலைவர்கள் கண்டுள்ள தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டாக்டர் மகாதீர் முகமது, தெங்கு ரசாலி ஹம்சா, கைரி ஜமாலூதின், அஸ்மின் அலி, நுரூல் இசா, காலிட் சமாட், தெங்கு அட்னான் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 
 
இந்தத் தோல்விகளுக்கு என்ன காரணம்? இது கொடுக்கும் பாடம் என்ன? ஆராய்கிறது 'செய்தி'.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் அரசியல் வாழ்க்கை அளவிட முடியாதது. இருந்தாலும் இம்முறை இவர் சந்தித்த தோல்வியானது, மக்கள் இவர் மீது கொண்டுள்ள மாறுபட்ட கண்ணோட்டத்தைக் காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Related article image
மூத்த விரிவுரையாளர், அரசியல் கவனிப்பாளர் முனைவர் சிவராஜன் பொன்னையா


"என்னைப் பொறுத்தவரை, சில முக்கியத் தலைவர்கள் சந்தித்த தோல்வி அவர்கள் அரசியலில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கின்றது. மூத்த அரசியல்வாதிகள்  இளையர்களுக்கு வழிவிடவேண்டும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதே சமயம், அவர்கள் இளைய சமுதாயத்திற்குச் சிறந்த ஆலோசகராகச் செயல்படலாம்,"

என மூத்த விரிவுரையாளரும் அரசியல் கவனிப்பாளருமான முனைவர் சிவராஜன் பொன்னையா கூறுகின்றார். 

மகாதீர் தவிர்த்து 1982ஆம் ஆண்டிலிருந்து அன்வார் இப்ராஹிமுக்கும் அவரது குடும்பத்துக்கும் வலுவான கோட்டையாக விளங்கிய பினாங்கு மாநிலத்திலுள்ள பெர்மாத்தாங் பாவோ தொகுதியில் அவரது மகள் நுரூல் இசாவின் தோல்வியும் உற்று நோக்கப்படுகிறது.

"நுரூல் இசா கடினமான உழைப்பாளி என்றாலும், இம்முறை பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி சார்பில் பாஸ் கட்சி வேட்பாளர் அத்தொகுதியில் களமிறக்கப்பட்டது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதற்குப் பாஸ் கட்சியின் மதம் சார்ந்த கொள்கைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்."

"அடுத்து சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை புலோ தொகுதியில் கைரி ஜமாலுதினின் தோல்வி. முன்னாள் சுகாதார அமைச்சராக அவரது பங்களிப்பு பெரிது என்றாலும், அத்தொகுதியில் பக்கத்தான் ஹராப்பானின் ஆட்சி நீடிக்கவேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது". 

என்று முனைவர் சிவராஜன் கூறினார்.

ஆக வாக்காளர்களைப் பொறுத்தவரை தனிநபரின் ஆளுமை முக்கியமல்ல; மாறாக, கூட்டணியின் ஆளுமையை அவர்கள் முக்கியமாகக் கருதுகின்றனர் என்றார் அவர்.

Related article image
வழக்கறிஞர், அரசியல் கவனிப்பாளர் திரு. மகேஸ்வரன்

இவ்வேளையில் அரசியலில் நிரந்தர வெற்றியாளர் என்று யாரும் இல்லை என்பது இந்தத் தேர்தலில் வெளிப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார், வழக்கறிஞரும் அரசியல் கவனிப்பாளருமான திரு. மகேஸ்வரன்.

"கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இந்தத் தலைவர்கள் எவ்வாறு பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதை அளவிட்டு மக்கள் இம்முறை வாக்களித்திருப்பதாக நான் கருதுகிறேன்,"

எனத் திரு.மகேஸ்வரன் சொன்னார்.

எனவே தேர்தல் சமயத்தில் மட்டும் தனியொரு கதாநாயகனாகச் செயல்படாமல், எல்லா நேரங்களிலும் மக்களுக்கான தேவைகள் அறிந்து செயல்படக்கூடிய தலைவரைத்தான் வாக்காளர்கள் விரும்புகின்றனர். 

"அரசியலில் மக்களின் ஒட்டுமொத்தப் பார்வை மாறியிருக்கிறது. இந்தத் தொகுதிக்கு நான் மிகவும் பழகிய முகம். எனவே எனக்குத்தான் வெற்றி  நிச்சயமுண்டு என்ற நினைப்பில் இல்லாமல் அரசியல் நேர்மையைக் கடைப்பிடிக்கும் தலைவராக இருப்பதையே வாக்காளர்கள் விரும்புகின்றனர்,"

என்றும் மகேஸ்வரன் குறிப்பிட்டார்.


 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்