Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'நம்மால் முடிந்ததைச் செய்வதில் ஓர் ஆறுதல்' - அலுப்பில்லாமல் சமைத்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் பசி போக்கும் மலேசியர்கள்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு வயிறார உணவளித்துப் பசியைப் போக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் மன ஆறுதலும் வேறெதிலும் கிடைப்பதில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

வாசிப்புநேரம் -

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு வயிறார உணவளித்துப் பசியைப் போக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் மன ஆறுதலும் வேறெதிலும் கிடைப்பதில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

அவ்வகையில் மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இனம், சமயம், மொழி என்று பாராமல் பலர் ஒன்றிணைந்து பணியாற்றி உணவளித்து வருகின்றனர். மேலும் பலர் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு தயாரிக்கும், விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலாங்கூரின் உலு லங்காட் (Hulu Langat), தாமான் ஸ்ரீ மூடா (Taman Sri Muda), கம்புங் காசிப்பிள்ளை (Kampung Kasipillay), செளகிட் (Chow Kit) போன்ற பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து உணவு சமைத்து வழங்கி வருகிறார் செல்வி ஜீனிஸ்ரீ ராமதாஸ்.

நாளொன்றுக்கு 450 பேருக்குத் தாங்கள் உணவு தயாரித்து வழங்குவதாகக் கூறுகிறார் இவர்.

இதனிடையே பூச்சோங் (Puchong), ஷா ஆலாமிலுள்ள தாமான் ஸ்ரீ மூடா (Taman Sri Muda), தாமான் பெர்மாத்தா டெங்கில் (Taman Permata Dengkil) ஆகிய இடங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுகளைச் சமைத்து விநியோகித்து வருகிறார், அரசு சாரா அமைப்பொன்றில் உறுப்பினராக இருக்கும் ஆசிரியை திருமதி. செல்வி காளிமுத்து.

அமைப்பில் இருக்கும் ஏறக்குறைய 20 உறுப்பினர்களோடு சேர்ந்து அவர் இப்பணியைச் செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துவிட்டதாகச் சொல்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுகளைச் சமைக்கவும், அவற்றைப் பொட்டலமிடவும், சீன அரசியல் கட்சியொன்று தனது பொது மண்டபத்தை வழங்கியுள்ளது.

எந்தவொரு வேற்றுமையும் இல்லாமல் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என அனைவரும் இணைந்தே இப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.

எனப் பெருமை பொங்கக் கூறினார் அவர்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 1,500 உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து வழங்கியிருக்கிறார்கள், மலேசிய சத்ய சாய் இயக்கத்தினர்.

இளையர்கள், முதியவர்கள் என ஏறக்குறைய 200 பேர் இப்பணியில் ஈடுபட்டிருப்பதாக, இயக்கத்தின் தேசிய இளையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.சுபாஷ் இளங்கோவன் கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராக இந்த வெள்ளப் பெருக்கு, பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது.

இன்னும் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

அவர்கள் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நாட்கள் பிடிக்கும்.

அத வரை ஒற்றுமையுடன், தங்களால் இயன்றதைச் செய்ய ஆயத்தமாக இருக்கின்றனர் மலேசியர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa