Skip to main content
இனி ஒரு வெள்ளத்தைத் தாங்கும் மனநிலை இல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா exclusive

இனி ஒரு வெள்ளத்தைத் தாங்கும் மனநிலை இல்லை - ஜொகூர்வாசிகளின் அழுகுரல்

வாசிப்புநேரம் -

மலேசியாவின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூர் மாநிலத்தையே உலுக்கியிருக்கும் இந்த வெள்ளம், சிங்கப்பூர் மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாகச் சாலைகளை உடைத்துக் கொண்டு வெள்ள நீர் செல்லும் காட்சிகள் சமூக ஊடகத்தில் பரவியது.

 

மலேசியாவின் கிளந்தான், திரங்கானு மாநிலங்கள் ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வழக்கம்.

தற்போது ஜொகூரும் அதில் இணைந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்துள்ளது.

ஜொகூரின் குறிப்பாக சிகாமாட் வட்டாரத்தைச் சேர்ந்த லாபீஸ், சீயா ஆகிய பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக சமூக சேவையாளர் மணிமாறன் தெரிவித்தார்.

"மக்கள் என்ன செய்வதென்று அறியாது வீட்டின் கூரை மீது ஏறிக் கொண்டார்கள். பலர் உயிர் பிழைத்ததே அதிசயம் எனக் கூறுகிறார்கள். இரவு நேரத்தில் இடைவிடாத மழை பெய்ததால், அவர்களுக்கு உடனடியாக உதவக்கூட முடியவில்லை"

"மறுநாள் காலையில் தகவல் அறிந்து அப்பகுதிகளுக்குச் சென்றபோது வீடமைப்பு பகுதிகளுக்குள் நுழைய முடியாதபடி வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது.“

என்றார் மணிமாறன்.

எங்களது அழுகுரல் வெளியில் கேட்காதா? என நாங்கள் கலங்கி நின்றது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஜொகூர் டாமான் கெம்பிராவில் வசிக்கும் சின் போக் மெய்.



துயர் துடைப்பு நிலையத்தில் இருக்கும் அவர்,

"இதிலிருந்து நாங்கள் மீண்டுவர 6 மாத காலம் ஆகுமென நினைக்கின்றோம். அனைத்தையும் இழந்தோம். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இனி ஒரு வெள்ளம் வந்தால் அதைத் தாங்கும் மனநிலையில் நாங்கள் இல்லை"

என சின் போக் மெய் கூறினார்.



இதே மனநிலையை செய்தியிடம் பகிர்ந்து கொண்டார் கிருஷ்ண மாலா.

"நமது வாழ்க்கையை வெள்ளம் அடியோடு மாற்றி விடுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் காலம் கடத்துவது எளிதல்ல. அது ரணத்தின் உச்சம்."



"வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் பல ஆண்டுகாலமாக சேர்த்த பிறகு ஒரு வெள்ளப் பேரிடர் அனைத்தையும் அடியோடு அழித்திடுமென்றால், அது எவ்வளவு வலி என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது."

எனக் கிருஷ்ண மாலா வருந்தினார்.



தாழ்வான பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்ததுதான் இந்த வெள்ளச் சிக்கலுக்குக் காரணம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஜொகூரின் கோத்தா திங்கி, சிகாமாட், கூலாய் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை தொடர்ந்தால், ஜொகூர் முழுமையும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்