ஆசியா செய்தியில் மட்டும்
மலேசிய வெள்ளம் - 'சேத மதிப்பைக் கணக்கிட மனம் இன்னும் தயாராகவில்லை'

மலேசியாவில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, பலரது வாழ்க்கையில் நீங்காச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் நேர்ந்த தாக்கமும் வலியும் காலத்துக்கும் நீடிக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
ஏற்கனவே COVID-19 நோய்த்தொற்றால் மக்கள் அவதியுறும் வேளையில் இயற்கையும் மனத்தளவில் பெரும் காயத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது என்கின்றனர் பலர். டிசம்பர் 18 வெள்ளத்தில் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் இழந்ததோடு ஆசை ஆசையாய் தாம் வாங்கிய புதுக் காரையும் பறிகொடுத்த தமது சகோதரரின் மரணம் குறித்துச் சொன்னார், சிலாங்கூர், தாமான் ஸ்ரீ மூடாவில் (Taman Sri Muda) வசிக்கும் 62 வயது திரு.K.பத்மநாபன். சோகத்தின் உச்சமாகத் தம் வீட்டில் நடந்ததையும் பகிர்ந்துகொண்டார்.

வெள்ளத்தில் சேதமடைந்த பொருட்களுக்குப் பதிலாக, மீண்டும் புதிய பொருட்களை வாங்கி விட முடியும். ஆனால் என் குடும்பத்தில் ஓர் உயிர் போய் விட்டது! அது திரும்ப வருமா? வெள்ளம் ஏற்படுத்திய சேதங்களையும் இழப்புகளையும் நினைத்து சதா வருந்திக் கொண்டிருந்த என் சகோதரரை எப்படியும் தேற்றி விடலாம் என நினைத்தோம்.
எனக் கூறி கண் கலங்கினார், திரு. பத்மநாபன்.
வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் 2 நாட்கள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் ஷா ஆலாமிலுள்ள எண்ணெய் நிலையத்திலேயே தங்கிய அனுபவத்தையும் திரு.பத்மநாபன் பகிர்ந்து கொண்டார்.
“வெள்ளம் வடிந்த பிறகு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேறு, சகதியில் மூழ்கியிருந்ததைக் கண்டு துடித்துப் போனோம். அதுமட்டுமல்ல, 35 ஆண்டுகளாக நான் செய்தித் துறையில் பணியாற்றி வருகிறேன். புத்தகங்கள் வாசிப்பதில் எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம்.
நான் சேகரித்து வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வெள்ளத்தில் இழந்து விட்டேன்.
என கனத்த மனதுடன் கூறினார் திரு.பத்மநாபன்.

மலேசியாவில் நன்கு அறியப்பட்ட பிரபல மலாய் இலக்கிய எழுத்தாளர் திரு. உதயசங்கர் எஸ்.பி. மூன்று மாடி வீட்டில் வசிக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாம் பொக்கிஷமாக நினைத்துச் சேர்த்து வைத்திருந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெள்ளத்தில் பறிகொடுத்தார்.
புத்தகங்களில் பெரும்பாலானவை மிகவும் அரிதானவை. அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை சில மணி நேரங்களிலேயே இழந்து விட்டதாகக் கூறிய போது திரு.உதயாவின் குரல் தழுதழுத்தது.

வீட்டின் கீழ்தளத்தில் புத்தகங்களோடு, கணினிகள் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அனைத்தும் டிசம்பர் 18 வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கின” என்று ‘செய்தி’யிடம் மிகுந்த வேதனையுடன் கூறினார் எழுத்தாளர் உதயா.
பகவத் கீதையை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்த பெருமைக்குரியவரான திரு.உதயா மேலும் பேசிய போது,
சம்பவத்தன்று வீட்டில் 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏறியது. 24 மணி நேரத்துக்கு மேலாக நீரிலேயே ஊறியதால் ஒரு புத்தகத்தைக் கூட என்னால் காப்பாற்ற முடியவில்லை. அதில் நான் சொந்தமாக எழுதி வெளியிட்ட சில புத்தகங்களும் இருந்தன.

எனது வீடு அமைந்துள்ள வரிசையில் வெள்ளம் ஏறியதில்லை. எனவே வெள்ளம் மோசமாகாது என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

வெள்ளத்தில் மூழ்கிய கார்கள் இன்னமும் வாகனப் பட்டறையில் தான் கிடக்கின்றன. இப்போதைக்கு எனது உறவினரின் காரை இரவல் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். சேத மதிப்பைக் கணக்கிட மனம் இன்னும் தயாராகவில்லை. அதை எண்ணும் போது வேதனை இன்னும் அதிகமாகிறது” என்றார் திரு.உதயா.
நிருபர்: தனலட்சுமி