ஆசியா செய்தியில் மட்டும்
மலேசியா: கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்ட மசோதாவுக்குக் கீழவையில் மகத்தான ஆதரவு

(Bernama)
மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகத்தான ஆதரவின் அடிப்படையில் 'நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்ட மசோதா' ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியலமைப்புத் திருத்த மசோதா (எண். 3) 2022, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடை விதிக்கும் சட்ட மசோதா இன்று (28 ஜூலை) நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னெடுக்கப்பட்டது.
இன்று 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்துக்கு வரவில்லை. இதர 209 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவை ஏகமனதாக ஆதரித்து நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் இந்தச் சட்ட மசோதா மேலவை கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் தாங்கள் பிரதிநிதித்த கட்சியை விட்டு விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரானாலோ வேறு கட்சியில் இணைந்தாலோ உடனடியாகப் பதவி விலகவேண்டுமென இந்தச் சட்ட மசோதா குறிப்பிடுகின்றது.
இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்படும் உறுப்பினர்கள் பதவிவிலகவேண்டிய அவசியமில்லை என்பதும் இதில் அடங்கும்.
முன்னதாக 2018ஆம் நடந்த மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, சுமார் 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 3 பிரதமர்கள் ஆளும் சூழல் உருவானது.
மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்ப்புகள் இன்றி ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.