ஆசியா செய்தியில் மட்டும்
'மலேசியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதில் அன்வாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது'- அரசியல் கவனிப்பாளர்கள்

படம்: AFP
பல ஆண்டுப் போரட்டத்திற்குப் பிறகு திரு. அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) மலேசியாவின் 10ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.
திரு. அன்வாரின் இந்த அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பது குறித்து சில அரசியல் கவனிப்பாளர்களிடம் கருத்துக் கேட்டது 'செய்தி'.
பொருளாதாரம் சீரடைய வேண்டும்.... ரிங்க்கிட்டின் மதிப்பு உயர வேண்டும்... பொருள்களின் விலை குறைய வேண்டும்... வாழ்க்கைச் செலவினம் குறைய வேண்டும்... வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும்.... தரமான கல்வி, சுகாதாரச் சேவைகள் கிடைக்க வேண்டும்.....நீடித்த நிலையான அரசியல் வேண்டும்.....
இவைதான் மலேசியர்களின் பொதுவான எதிர்பார்ப்பு என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
இவற்றை நிறைவேற்றவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தற்போது திரு. அன்வாரின் தோள்களுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார், அரசியல் கவனிப்பாளரும் வழக்கறிஞருமான திரு. மகேஸ்வரன்.

"மாறுபட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அன்வாருக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர் இதனைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால், மலேசிய மக்களுக்கு மாற்றத்தின் மேல் இருக்கின்ற நம்பிக்கையே போய்விடும்,"
"இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்..இது அவருக்கு மிகப் பெரிய சவாலாக அமையலாம். ஆனால் அது அடைய முடியாத காரியமல்ல. பல இனம் சார்ந்தக் கட்சியை வழிநடத்தும் அன்வார் மக்களையும் அதேமுறையில் வழிநடத்தமுடியும்,"
என்றார் அவர்.
ஏற்கெனெவே நிதியமைச்சராக இருந்த அனுபவம் இருப்பதால் மலேசியாவின் நலிந்தப் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தக்கூடிய ஆற்றல் அன்வாருக்கு இருக்கும் என நம்புவதாகவும் திரு மகேஸ்வரன் சொன்னார்.
உலக அரசியலைப் பொறுத்தவரை அன்வாருக்கு அறிமுகம் தேவையில்லை எனக் கூறுகிறார், அரசியல் கவனிப்பாளரும் மூத்த விரிவுரையாளருமான முனைவர் சிவராஜன் பொன்னையா.

"மலேசியாவை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவதில் அன்வாருக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. ஒட்டுமொத்த மலேசியர்களுக்கான பிரதமராக செயல்படுவதில்தான் அவரது அரசியல் ஆளுமை வெளிப்படும்,".
என திரு.சிவராஜன் தெரிவித்தார்.
திரு அன்வாரின் நியமனம் குறித்து பெரிக்கத்தான் நேசனல் கூட்டணித் தலைவர் முஹிதின் யாசின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மத்திய அரசாங்கத்தை அமைக்கத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் அதனால் திரு. அன்வாரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திரு. முஹிதின் கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கருத்துரைத்த திரு.மகேஸ்வரன்:
"மாமன்னருடைய முடிவுக்கு உட்பட்டு அன்வாரின் பதவி நியமனம் அமைந்துள்ளது. எனவே அரசாங்கம் நிலைக்குமா இல்லையா என்பது தொடர்பில் எந்த ஆரூடங்களையும் இப்போதைக்குக் கூற இயலாது."
"பெரும்பான்மை இல்லாமல் அன்வாரை நியமிக்க முடியாது என்பதை மாமன்னரும் அறிவார். எனவே இதில் சிக்கல் இருப்பதாகத் தோன்றவில்லை,"
என்றார் .