Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர் வர ஆவலுடன் இருக்கும் மலேசியர்கள்... பொறுமை காக்கும் சிலர்...

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தரைவழியிலான தடுப்பூசிப் பயணத்தடத் (VTL) திட்டம், வரும் திங்கட்கிழமை (20-12-2021) முதல்  விரிவுபடுத்தப்படவிருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு வர ஆவலுடன் காத்திருக்கின்றனர் மலேசியர்கள் பலர். 

வாசிப்புநேரம் -

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தரைவழியிலான தடுப்பூசிப் பயணத்தடத் (VTL) திட்டம், வரும் திங்கட்கிழமை (20-12-2021) முதல் விரிவுபடுத்தப்படவிருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு வர ஆவலுடன் காத்திருக்கின்றனர் மலேசியர்கள் பலர்.

அந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் சிங்கப்பூர்க் குடிமக்கள் மலேசியா செல்லமுடியும். மலேசியக் குடிமக்கள் சிங்கப்பூருக்கு வரலாம்.

இதற்கு முன்னர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய – சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி பெற்றிருப்போர், தத்தம் சொந்த நாட்டுக்குப் போவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அண்மை அறிவிப்புக் குறித்து மலேசியர்கள் சிலரிடம் பேசியது 'செய்தி'.

அந்த அறிவிப்பு, அருகிலிருக்கும் சிங்கப்பூருக்குக் கூடப் போகமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த மலேசியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

சிங்கப்பூருக்கு மகளை அழைத்துச் செல்ல ஆவலோடு இருக்கின்றனர் மோகனசுந்தர் தம்பதியர்.

சிங்கப்பூர் சென்று ஏறக்குறைய நான்காண்டு ஆகிவிட்டதாகக் கூறும் அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்லலாம் என நினைத்திருந்தபோதுதான் நோய்ப் பரவல் ஏற்பட்டு எல்லைகள் யாவும் மூடப்பட்டன என்றனர்.

தரை வழியிலான VTL திட்டத்தின்படி, பேருந்துச் சேவையை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்த முடியும். இது ஒரு சிலருக்கு அதிருப்தியைத் தந்துள்ளது.

சொந்த வாகனத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்கிறார்
ஜொகூரின் தம்போய் (Tampoi) வட்டாரத்தில் வசிக்கும் திரு.முரளி முனிய கிருஷ்ணன்.

இதில் மற்றுமொரு சவால் பேருந்து டிக்கெட் கிடைப்பது. இதுவே சொந்த வாகனமாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எல்லைகள் திறந்து விடப்பட்ட பின்னர் பேருந்து டிக்கெட் கிடைப்பது பெரும் சிரமமாகிவிட்டது.

20ஆம் தேதியிலிருந்து எந்த மாதிரியான விதிமுறைகள் கொண்டுவரப்படும் என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனவே நிலைமையைப் பொறுத்திருந்து பார்த்து சில தினங்கள் கழித்து சிங்கப்பூர் செல்வேன்

என்கிறார் திரு. முரளி.

செலவாகும் என்பதால் இப்போதைக்குச் சிங்கப்பூர் செல்லமாட்டேன் என்கிறார் தனியார் கல்லூரியொன்றில் நிதி நிர்வாகியாகப் பணிபுரியும் திருமதி. கோகிலவாணி பாலசிங்கம்.

இப்போதைக்கு வெளியூர்களுக்குச் செல்லாமல் உள்நாட்டில் பாதுகாப்புடன் இருப்பதே சிறந்தது

என்கிறார் அவர்.

தரைவழியிலான VTL திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் சிங்கப்பூருக்கு உடனடியாகச் செல்லாமல், பொறுத்திருந்து ஒரு மாதம் கழித்துச் செல்ல எண்ணியுள்ளோம் என்கிறார் ஜொகூரின் கெம்பாஸ் (Kempas) பகுதியில் வசிக்கும் ஆசிரியை திருமதி. தர்ஷிணி முருகன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்