Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியாவின் பத்துமலையில் பிரசவ வலி ஏற்பட்ட மலாய் மாதுக்குப் பிரசவம் பார்த்த பக்தர்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் தைப்பூசத் திருவிழா பல்வேறு  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருந்த நிலையில், கோலாலம்பூரின் பத்துமலை அருகே அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

பத்துமலை, ஸ்ரீ சுப்ரமணியர்  ஆலயத்திற்கு முன்பு மலாய் பெண் ஒருவர், வாகனத்துக்குள்ளேயே அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். 

அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது, தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்கள் என்பது தான் அதன் சிறப்பம்சமே!

நேற்று முன்தினம் (18 ஜனவரி) காலை அப்பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, பிரசவ வலி ஏற்பட்டது.

பத்துமலை, ஸ்ரீ சுப்ரமணியர்  ஆலயத்திற்கு வெளியே திடீரென காரொன்று வந்து நின்றதாகவும் 
உள்ளே பெண் ஒருவர் கதறும் சத்தம் கேட்டு ஓடோடிச் சென்று பார்த்ததாகவும் கூறினார், சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த திரு.LK சவந்தராஜா என்பவர். 

"காருக்குள் அப்பெண் பிரவச வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.  தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மூன்று பெண்கள், அந்த மலாய் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவிக் கொண்டிருந்தனர். காருக்குள் இருந்த கணவன் – மனைவி இருவரைத் தவிர்த்து அங்கிருந்த மற்ற அனைவருமே இந்தியர்கள்.  

பெண் இருக்கும் காரை மறைப்பதற்காக, பால் குடம் ஏந்திச் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தனது வேட்டியைக் கழற்றிக் கொடுத்தார்,"

என்று அவர் சொன்னார்.

இன்னும் சில பெண்களோ தங்களது துப்பட்டாவைக் கொடுத்து, காரை மறைக்க உதவியதாகக் கூறப்பட்டது.

சரியாகக் காலை மணி 7.24க்கு அந்த மலாய் மாது அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

"மகிழ்ச்சியில் நானும் அங்கிருந்தவர்களும் துள்ளிக் குதித்தோம். அந்த மலாய் ஆடவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அந்த இனிய நினைவுகளை என் கைப்பேசியில் படமெடுத்தேன்,"  

என்று திரு. சவந்தராஜா சொன்னார்.

தொப்புள் கொடியை அறுத்த சிறிது நேரத்தில் அவசர மருத்துவ வாகனமும் விரைவில் சம்பவ இடத்தைச் சென்றடைந்தது. பின்னர் தொடர் சிகிச்சைக்காக, அப்பெண்ணும் அவரது சிசுவும் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். 

தம்முடைய கைத்தொலைபேசியில் பதிவு செய்த படங்கள் யாவும் இந்தளவுக்கு பகிரப்படும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று கூறினார் திரு.சவந்தராஜா.

"இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்”

என அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். 

ஏற்கனவே மலேசியாவில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டிருந்த சமயத்தில் மக்கள் அனைவரும் இனம், மதம், மொழி என்ற எந்த பேதமும் இல்லாமல் உயிர்களைக் காப்பாற்றி, தங்களின் ஒற்றுமையையும் மனிதநேய உணர்வையும் வெளிப்படுத்தியிருந்தனர். 

இப்போது, பத்துமலைக்கு அருகே மலாய் பெண் ஒருவருக்கு, தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த பக்தர்கள் பிரசவம் பார்த்து, மீண்டும் தங்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

(நிருபர்: தனலெட்சுமி)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்