Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரின் வார இறுதி விடுமுறை சிங்கப்பூருடன் ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறும் ஜொகூர்வாசிகள்

வாசிப்புநேரம் -

ஜொகூர் மாநில வார விடுமுறை தற்போது வெள்ளி, சனிக்கிழமைகளில் வழங்கப்படுகின்றன.

அதை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்வதாக அம்மாநில முதலமைச்சர் ஓன் ஹாபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) கூறியிருந்தார்.

அவரின் அந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மட்டுமின்றி சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களையும் சிங்கப்பூரர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அரசாங்க ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் ஒரே விடுமுறை நாள்களைப் பெறுவர். 

அதனால் குடும்பங்களின் செயல்பாடுகள் எளிதாகும். 

அதோடு வார இறுதியில் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட அதிக நேரம் கிடைக்குமென்கிறார் மாநில ஒற்றுமைப் பிரிவு அதிகாரி வள்ளியம்மா லோகந்தன்.

"மலேசியாவில் சில மாநிலங்களைத் தவிர்த்து இதர மாநிலங்களில் வார விடுமுறை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. 

வார விடுமுறை ஒரே நாள்களில் அமைந்தால், வெளி மாநிலங்களில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை அவ்வப்போது சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியும். அதை உடனே செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்" 

என்று அவர் குறிப்பிட்டார்.

(படம்: Sultan Ibrahim Sultan Iskandar / Facebook)

2013ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலத்தின் ஓய்வு நாள்களைச் சனி, ஞாயிறுக்குப் பதிலாக வெள்ளி, சனிக்கு மாற்றுவதாக அறிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து மாநிலத்தில் வார இறுதி விடுமுறையில் மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜொகூர் மட்டுமல்லாமல் கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களும் வெள்ளி, சனிக்கிழமைகளை விடுமுறை நாள்களாகக் கொண்டுள்ளன.

சிங்கப்பூரில் பணியாற்றும் ரவின், தம்மைப்போல் ஜொகூரில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் என்றார். 

சிங்கப்பூரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை வருவதுபோல் ஜொகூரிலும் வழங்கப்பட்டால் அதிகமான மலேசியர்கள் தங்களின் பிள்ளைகள், குடும்பத்தாருடன் ஓய்வைக் கழிக்கமுடியும் என்று அவர் சொன்னார்.

"ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தாருடன் வீட்டில் இருக்கலாம் என நினைத்தால்,  அனைவரும் வேலைக்குச் சென்று விடுகிறார்கள். சில குடும்பங்களில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இதனால் வார இறுதி விடுமுறையில் வீட்டிற்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன்."

என்றார் அவர்.

கூடிய விரைவில் அறிவிப்பு வருமெனக் காத்திருப்பதாகவும் ரவின் தெரிவித்தார்.

(படம்: Pixabay)

ஜொகூரில் தற்போது ஞாயிற்றுக்கிழமை வேலை நாள். அன்று பிள்ளைகளும் பள்ளி செல்கிறார்கள். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல். 

குறிப்பாகச் சிங்கப்பூர் மக்கள் அதிகமாகக் கூடும் ஜொகூர் பாருவிலும் இதே நிலைதான் என்கிறார் அங்கு உணவகம் நடத்தி வரும் தங்கமணி.

"வார இறுதி சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டால், ஜொகூருக்கு வரும் சிங்கப்பூர் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயரும். இதனால் வர்த்தகர்களும் தங்களின் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்."

COVID-19 தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக மலேசியா - சிங்கப்பூர் எல்லை மூடப்பட்டிருந்தது. 

மே 1 முதல் எல்லைகள் திறக்கப்பட்டன. சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களும் அதிகமாக ஜொகூருக்குச் செல்கிறார்கள்.

இச்சூழலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டால் அனைவருக்குமே மகிழ்ச்சிதான் எனச் செய்தியிடம் பேசிய சிலர் தெரிவித்தனர். 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa