Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

"அன்வார் சிறந்த பிரதமராக விளங்கவேண்டும்; கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும்." மலேசியர்கள் கருத்து

வாசிப்புநேரம் -
திரு அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக இன்று (24 நவம்பர்) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தைப் பற்றி மலேசிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிய 'செய்தி' அவர்களை அணுகியது.

பெயர்: ஜேம்ஸ் (James)

"நீண்டநாள் போராட்டத்திற்குப் பின்பு விடிவுகாலம் வந்துவிட்டது. திரு அன்வார் இப்ராஹிம் மிகச்சிறந்த அமைச்சராக இருந்தவர். இன்று நாட்டை வழிநடத்தவுள்ளார் என நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆசியாவில் மலேசியா மறுபடியும் தலை நிமிர்ந்து நிற்கும். காரணம் வெளிநாட்டில் அவருக்கு அதிகளவில் செல்வாக்கு உள்ளது. அதோடு அவர் பல இன மக்களுக்கு நிறைய வாய்ப்புகளை அளிக்க முன்வருவார் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன். உண்மையே வெல்லும், இன்று உண்மை வென்றுவிட்டது"

பெயர்: மனோகரன் (Manogaran)

"1997 ஆசிய நிதிநெருக்கடியின்போது நிதியமைச்சராக இருந்த அனுபவம் திரு அன்வாருக்கு உண்டு. அதனைச் சமாளித்த அவர் சிறந்த பிரதமராக விளங்குவார் என நம்புகிறேன்"

பெயர்: ஜோஷுவா (Joshua)

"நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு நல்ல முடிவு கிடைத்துள்ளது. இனம், மொழி, சமயம் ஆகிய வேற்றுமைகள் இன்றி, ஒற்றுமையின் துணைகொண்டு திரு அன்வார் சவால்களை எதிர்கொள்வார். அதோடு அவரின் சமூக நலச் சிந்தனையும் மலேசியாவிற்கு உறுதுணையாக இருக்கும் ."

பெயர்: சார்ல்ஸ் (Charles)

"உலகமே மலேசியத் தேர்தலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. இந்த இழுப்பு நடந்திருக்கக்கூடாது. அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மலேசியாவின் எதிர்காலத்திற்கு விளக்கேற்றி வைப்பார் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்ற வேண்டும். இல்லாவிடில் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துவிடுவர்"

பெயர்: அனுஸ்யா (Anusuya)

"அவர் புதுப்புதுத் திட்டங்களை மேற்கொள்வார் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம். முக்கியமாகக் கல்வியிலும் இளையர்கள் தொடர்பிலும் அவர் மாற்றங்களைக் கொண்டு வருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்"
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்