ஆசியா exclusive
'தோலுறைவு... உடம்பை உருக்கும் வலி... உச்சத்தைக் காணும்போது தெரியவில்லை...' - எவரெஸ்ட் உச்சியிலிருந்து காப்பாற்றப்பட்ட மலேசியர்
மலையேறுவது சிலருக்குப் பொழுதுபோக்கு.
சிலருக்குத் தியானம்.
அதில் தாம் 2ஆவது ரகம் என்கிறார் 4 முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட ரவிச்சந்திரன்.
அண்மையில் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து ஷெர்பா வழிகாட்டியால் காப்பாற்றப்பட்ட மலேசிய மலையேறி அவர்தான்.
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டது மகிழ்ச்சி என்றாலும் மனதில் கவலைக்குப் பஞ்சமில்லை என அவர் 'செய்தி'யிடம் கூறினார்.
இந்தப் பயணத்தில் சிலரின் இழப்பு தம்மைப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவரெஸ்ட் மலையேறச் சென்ற மலேசியாவின் அவாங் அஸ்கந்தர் அம்புவான் யாக்கோப் மரணமடைந்துவிட்டார்.
மற்றொருவரான முஹமது ஹவாரி ஹஷிமைத் தேடும் பணி தொடர்கிறது.
"இந்தக் கவலையில் என் வெற்றியைக் கொண்டாடுவதில் எனக்குப் பெரிய விருப்பமில்லை."
என்றார்.
Lohtse மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, Frostbite எனப்படும் உறைபனி தோலுறைவால் ரவிச்சந்திரன் பாதிக்கப்பட்டார்.
உடம்பை உருக்கும் வலி...
கண்முன்னே 200 மீட்டர் தூரத்தில் எவரெஸ்ட் உச்சம்...
வலி தெரியவில்லை என்றார் ரவிச்சந்திரன்.
"இன்றும் அந்த வலி என்னை வாட்டுகிறது. என் கையுறையைக் கழற்றிப் பார்த்தால் என் வேதனை புரியும். அதிலிருந்து மீள்வதற்குச் சில மாதங்கள்கூட ஆகலாம். ஆனால் எவரெஸ்ட் உச்சத்தைத் தொட்டபிறகு இந்த வலி பெரிதல்ல."
Evarest - Lhotse Himalaya 2023 எனும் குழுவில் இணைந்திருந்த ரவிச்சந்திரன் 24 மணி நேரத்தில் 8,000 மீட்டர் உயரத்திற்கும் மேலான இரு மலைகளைக் கடக்கும் இலக்கைக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் உறைபனி பாதிப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
அத்தனைத் தடைகளையும் தாண்டி 8,848 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தை 4ஆவது முறையாக நேபாள நேரப்படி மே 17ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அவர் அடைந்தார்.
அதுவும் 3ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சுமார் ஓராண்டில் இந்தச் சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.
மலேசியா விவசாயப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் மலை உச்சியைத் தொட்டார்.
"ஒருமுறைதான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை அடைய வேண்டும் என்ற சட்டம் எல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒரு தவம். அனைத்தையும் கடந்து இயற்கைதான் எல்லாமே என்பதை உணர்த்துகிறது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம்"
என்று அவர் தெரிவித்தார்.