'மலேசியாவின் 15 ஆவது பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் முழு மனத்தோடு போட்டியிடும்'
Facebook/Malaysian Indian Congress
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று தேசிய முன்னணியின் தலைவர் திரு. ஸாஹிட் ஹாமிடி அறிவித்த வேட்பாளர்களை ம.இ.கா முழு மனத்துடன் ஏற்றுக்கொள்வதாகக் கட்சியின் தலைவர் திரு. விக்னேஸ்வரன் கூறினார்.
இன்று நடந்த கட்சியின் மத்தியச் செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அதனைத் தெரிவித்தார்.
ம.இ.காவின் பாரம்பரியத் தொகுதிகளான சுங்கை சிப்புட், தாப்பா, உலு சிலாங்கூர், கோத்தா ராஜா, போர்ட் டிக்சன், சிகாமாட் ஆகியவற்றிலும் புதிதாக பாடாங் செராய், தெலுக் இந்தான், குவாலா லாங்காட் ஆகிய இடங்களிலும் கட்சி போட்டியிடவுள்ளது.
"சில தொகுதிகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அம்னோ, மலேசியச் சீனர் சங்கம் ஆகியவற்றுக்குச் சில தொகுதிகள் சென்றுள்ளன." என்றார் அவர்.
தொகுதி மாற்றம் குறித்த அனைத்து முடிவுகளும் தேசிய முன்னணியின் தலைவர் திரு. ஸாஹிட் ஹமிடியால் எடுக்கப்பட்டவை என்றும் அவை இறுதியானவை என்றும் திரு. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தோழமைக் கட்சிகளான IPF, மக்கள் சக்தி, கிம்மா ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கும் ம.இ.கா ஆதரவு தெரிவிப்பதாக அவர் சொன்னார்.
ம.இ.கா வெற்றியை உறுதி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே ம.இ.கா-வின் முதன்மை நோக்கம் என்றும் திரு. விக்னேஸ்வரன் கூறினார்.
ம. இ. கா உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அதனையடுத்து அம்னோவுடன் ம.இ.காவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாய் வதந்திகள் பரவின.