Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

‘போதிய வருமானம் இல்லை; வேலைப்பளுவும் அதிகம்’- மருத்துவர் பற்றாக்குறைச் சிக்கலில் மலேசியா

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் மலேசியாவில் தலைதூக்கத் தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டுச் சுகாதாரத் துறை மனிதவளச் சிக்கலைச் சந்திக்கக்கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது.

மலேசியச் சுகாதார அமைச்சின் உபகாரச் சம்பளத்தைப் பெற்று மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் 5 ஆண்டுக்குப் பொது மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயம். 

அந்த 5 ஆண்டில் அவர்கள் அரசாங்க வேலையிலிருந்து விலகினால், பெற்ற உபகாரச் சம்பளத்தைக் காட்டிலும் கூடுதலான அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் தற்போது மலேசியச் சுகாதார அமைச்சு இந்த நடைமுறையில் தளர்வு வழங்க முடிவுசெய்துள்ளது.

குறிப்பாக மருத்துவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப பணி ஓய்வு அல்லது ஒப்பந்தத்தை மீட்டுக்கொள்ளும் சலுகையை வழங்க அது ஆலோசித்து வருகிறது. 

அது நடைமுறைப்படுத்தப்பட்டால் மருத்துவர்கள் பற்றாக்குறை நிச்சயம் தலைதூக்குமென தற்போது பணிபுரியும் மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

ஏற்கனவே மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு

அரசு பொது மருத்துவமனைகளில் ஏற்கனவே மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. 

ஒரேயொரு மருத்துவர்தான் நாள் முழுவதும் நோயாளிகளைக் கவனிக்கின்றார். 

இந்நிலையில் புதிய சலுகை மேலும் நிலைமையைக் கடுமையாக்குமெனக் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

"2020ஆம் ஆண்டு COVID-19 தாக்கம் தொடங்கியது முதல் சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்."

"அனைத்துச் சுகாதார பரிசோதனைகளையும் மேற்கொள்பவர் மருத்துவர்தான். அதோடு விடுமுறை இல்லாமல் பணியாற்றும் விதிமுறை. இதனால் பல மருத்துவர்கள் பணியிலிருந்து விலகிவிட்டனர்." 

என்றார் அவர்.

2019ஆம் ஆண்டு மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட  மருத்துவர்கள் எண்ணிக்கை 67,590. 

2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 71,041 ஆக அதிகரித்தது.

இவர்களில் 73 விழுக்காட்டு மருத்துவர்கள் மலேசியச் சுகாதார அமைச்சின்கீழ் பணியாற்றுகின்றனர்.

போதுமான வருமானம் இல்லை

அரசாங்கத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதுமான வருமானம் இருப்பதில்லை. அதோடு அதிகமான வேலை பளு. 

இதனால் பெரும்பாலானோர் தனியார் அல்லது வெளிநாடுகளில் வேலைசெய்வதை அதிகம் விரும்புவதாகக் கூறுகிறார் அரசு மருத்துவராகப் பணியைத் தொடங்கி தற்போது சொந்த மருந்தகத்தை நடத்திவரும் டாக்டர் சத்திய பிரகாஷ்.

"அரசு உபகாரச் சம்பளம் பெற்றுப் படித்த மருத்துவர்களுக்குத் தளர்வு வழங்கினால் அவர்கள் நிச்சயம் வெளியேறிவிடுவார்கள். இது அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் மக்களுக்குப் பாதகமாக அமையும்."

பல மணி நேரக் காத்திருப்பு

இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல்.  

இந்த நிலை பல ஆண்டுகாலமாகத் தொடர்வதாகத் தனியார் மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றும் கோமளம் பாலகிருஷ்ணன் கூறினார்.

"தனியார் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், தாதியர் மத்தியிலும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 50 நோயாளிகளை இருவர் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. சில சமயங்களில் மருத்துவர்கள் இருக்கவே மாட்டார்கள்."

அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளும் பல்வேறான சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் மருத்துவர்களின் சேவைக்காலம் முடிவதற்குள் ஓய்வு வழங்குவது முறையல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa