Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

‘மலேசியாவில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை அமையாமல் புதிய கூட்டணி உருவெடுக்கலாம்’

வாசிப்புநேரம் -

மலேசியப் பொதுத்தேர்தலில் இம்முறை 945 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நேற்றைய (5 நவம்பர்) வேட்புமனுத்தாக்கலுக்குப் பிறகு மலேசியத் தேர்தல் ஆணையம் அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.

இதையடுத்து மலேசிய அரசியல் வரலாற்றில் 15ஆவது பொதுத்தேர்தல் மிகத் தீவிரத் தேர்தலாக அமைந்துள்ளது.

இதற்கு முன் மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தலில் 687 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

13ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 579ஆகும்.

இந்தத் தேர்தலின் பெரிய எண்ணிக்கை, பன்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ள வேட்பாளர்களுக்குச் சாதகமான வாக்குகளைப் பெற்றுத்தருமா? அதன் தொடர்பில் மலேசியத் தேர்தல் ஆய்வாளர் டாக்டர் ஜி.மணிமாறனிடம் கருத்துகள் கேட்டது 'செய்தி'...

இம்முறை தேர்தலில் பல தொகுதிகளில் 5க்கும்  அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.

குறிப்பாகக் கோலாலம்பூர் பத்து (Batu) தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

"இதனைச் சரித்திரபூர்வ நிகழ்வாக நான் கருதுகிறேன். இதற்கு முன் சபா, சரவாக் மாநிலங்களில் ஒரு தொகுதியில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு கெடா மாநிலத்திலுள்ள புக்கிட் செலாம்பாவ் (Bukit Selambau) தொகுதி இடைத்தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்."

என மலேசியத் தேர்தல் சீர்திருத்தக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான திரு மணிமாறன் தெரிவித்தார்.

அதிகமான வேட்பாளர் எண்ணிக்கை காரணமாக மலாய்க்காரர்களின் வாக்குகள் சிதற வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி - பக்கத்தான் ஹராப்பான் என இரு கூட்டணிகள் நேருக்கு நேர் போட்டியிட்டன. ஆனால் இந்த முறை தீபகற்பத்தில் மட்டும் 4 கூட்டணிகள் மோதுகின்றன. இதனால் வாக்குகள் நிச்சயம் சிதற வாய்ப்புள்ளது. இதனால் ஒருசில வேட்பாளர்கள் இன அடிப்படையில் அரசியல் செவ்வாக்குப் பெற்று ஆட்சிக்கு வரவும் வாய்ப்பிருப்பதாய் நான் கருதுகிறேன்."

இதன் அடிப்படையில் பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை இப்போதைக்குக் கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக மணிமாறன் கூறினார்.

19ஆம் தேதி தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை அமையாமல் புதிய ஆட்சி அமைக்க மேலுமொரு புதிய கூட்டணி உருவெடுக்கக்கூடிய சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என்றார் அவர்.

இம்முறை 25இல் இருந்து 30 தொகுதிகள் கவனத்தை ஈர்க்கக்கூடிய, உற்று கவனிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன.

தம்புன் (Tambun), தாப்பா (Tapah), கோம்பாக் (Gombak), பண்டான் (Pandan), சுங்கை சிப்புட் (Sungai Siput), லங்காவி (Langkawi), பத்து (Batu) உள்ளிட்டவை அதில் அடங்கும் எனத் திரு மணிமாறன் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்