Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசிய நாடாளுமன்றம் அக்டோபரில் கலைக்கப்படுமா? அரசியல் விமர்சகர்களின் பார்வை

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இடம்பெற்றுள்ள அம்னோ கட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கச் சங்கங்கள் பதிவாளர் ஒப்புதல் அளித்துள்ளது. 

பொதுத் தேர்தல் நடந்த 6 மாதத்திற்குள் அம்னோ கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிவிடும் நடவடிக்கைகள் குறித்து மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அரசியல் கவனிப்பாளர் வழக்கறிஞர் எம். முருகேசன் கூறுகிறார்.

 

"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் உள்ளது. அல்லது நிதிநிலையைச் சிறப்பாக முறையில் அறிவித்துவிட்டு அதை முன்னிறுத்தித் தேர்தலுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது."

அந்த வகையில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாகவும் முருகேசன் குறிப்பிட்டார்.

"அடிப்படைப் பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமையல் எண்ணெயின் விலை குறைந்துள்ளது. மலேசியாவில் மட்டுமே இன்னும் பெட்ரோல் விலை உயரவில்லை. இச்சூழ்நிலையில் தேர்தலுக்கு வழிவிடுவது நல்லது எனப் பிரதமர் கருதலாம்"

என்பதையும் அவர் சுட்டினார்.

 சில சிக்கல்கள்

அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஊடகத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணியாற்றும் கே. பத்பநாதன் கூறினார்.

"அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் உருவாகும். ஆனால் இந்த இரண்டு மாதங்களில் மலேசியாவில் மழைக்காலம். குறிப்பாகப் பலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும். கடந்த ஆண்டு மலேசியாவை உலுக்கிய வெள்ளப் பேரிடரை யாருமே மறந்திருக்க மாட்டார்கள்"

அத்தருணத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. மக்களும் அதை விரும்ப மாட்டார்கள். இதன் காரணமாக அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் தேர்தல் நடக்கலாம் என்கிறார் பத்பநாதன்.

மலேசிய மக்களைப் பொறுத்தவரை அடுத்த பொதுத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். நிலையான ஆட்சிதான் நிரந்தரத் தீர்வாக அமையுமென்பதையும் மலேசியர்கள் உணர்ந்துள்ளார்கள்.

மலேசியாவில் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் நடைபெறவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்