Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

அரசியல் பயணம் நீடிக்க மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் எடுக்கும் இறுதி முயற்சி... "வழக்கு எந்தத் திசையிலும் செல்லலாம்" - அரசியல் கவனிப்பாளர்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் முன்னைய வழக்கறிஞர் முகம்மது சஃபி அப்துல்லா இன்று நீதிமன்றத்துக்குத் திரும்பிவந்தார். 

தலைமை நீதிபதி திருவாட்டி தெங்கு மைமுன் துவான் மாட்டை (Tengku Maimun Tuan Mat) விசாரணை நடத்துவதிலிருந்து  விலக்கிவைக்க வேண்டும் என்று நஜீப்பின் தற்காப்புத் தரப்பு வாதிடுகிறது. 

அதன் பொருட்டே பழைய வழக்கறிஞர் முகமது ஷஃபீ அப்துல்லாவின் (Muhammad Shafee Abdullah) உதவி நாடப்பட்டுள்ளதாக நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தெயிக் (Hisyam Teh Poh Teik) கூறினார். 

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்டின்  கணவர் நஜீப்புக்கு எதிரான கருத்தை வெளிப்படையாகக் காட்டியதாகத் தற்காப்புத் தரப்பு சொல்கிறது. 

எனவே தலைமை நீதிபதி இந்த வழக்கிலிருந்து விலக வேண்டும் என்கிறது நஜீப் தரப்பு. 

தலைமை நீதிபதியை மாற்றுவதாக இருந்தால் வழக்கை ஒத்திவைக்க வேண்டிவரலாம். 

42 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கையாடியது தொடர்பான வழக்கில் நஜீப்புக்கு உயர்நீதிமன்றம் 12 ஆண்டுச் சிறையும் சுமார் 50 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது. 

உச்சநீதிமன்றத்தில் இப்போது மேல்முறையீட்டு வழக்கு நடக்கிறது. இது அவருக்குக் கடைசி வாய்ப்பு.

இதற்கிடையே மலேசியாவில் இருக்கும் எமது நிருபர் தயாளன் சண்முகம் அங்கிருக்கும் நிலவரம் பற்றி விவரித்தார். 

முன்னாள் பிரதமர் நஜீப் நீதிமன்றத்துக்கு இன்று திரும்பியபோது சற்று பரபரப்பாக இருந்தது.

3 நாள்களுக்குப் பிறகு நீதிமன்ற வளாகத்தில் இன்று திரு நஜீப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். 

10க்கும் அதிகமான பேருந்துகளில் வந்தடைந்து கூட்டரசு நீதிமன்ற வளாகத்தின் முன் கூடி பலவகையான வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

திரு நஜீப்பின் வழக்கறிஞர் குழுவிலிருந்து அவ்வப்போது ஒருவர் வெளியில் வந்து, நிலைமை இன்னும் சாதகமாகவே இருப்பதாய் அவரது ஆதரவாளர்களிடம் கூறிச் சென்றனர். 

அரசியல் பயணத்தை இன்னும் சில காலம் நீட்டிக்க, திரு நஜீப் எடுத்திருக்கும் இறுதி முயற்சி இது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

வழக்கு எந்தத் திசையிலும் செல்லலாம் என்றும் அவர்கள் கூறுவதாக நிருபர் தயாளன் தெரிவித்தார். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்