அமெரிக்க மக்களவை நாயகர் பெலோசிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் சீனா தடை

(படம்: REUTERS/Evelyn Hockstein)
அமெரிக்காவின் மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi), அவரது குடும்பத்தினருக்கும் எதிராகச் சீனா தடை விதித்துள்ளது.
அவரின் சினமூட்டும் செயல்களால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி திருமதி பெலோசி தைவானுக்குச் சென்றதை அது சுட்டியது.
தனது உள்நாட்டு விவகாரத்தில் அவர் தலையிட்டதாகவும் தைவானிய நீரிணையின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் சீனா குறைகூறியது.
திருமதி பெலோசி தைவானுக்குச் சென்றிருந்தபோது அதன் ஜனநாயம், பொருளியல் ரீதியான வெற்றி, மனித உரிமைச் சாதனைகள் ஆகியவற்றை மெச்சியிருந்தார்.
தைவானிய அதிபர் சாய் இங்வென்னைச் (Tsai Ing-wen) சந்தித்து, பின்னர் செய்தியாளர் கூட்டத்தையும் அவருடன் இணைந்து நடத்தியிருந்தார் திருமதி பெலோசி.