Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியாவில் மேலும் அதிகரிக்கவிருக்கும் அடிப்படைப் பொருள்களின் விலை...கலங்கி நிற்கிறோம் என்று கூறும் மலேசிய வணிகர்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில்  ஏறிய விலைகள் மீண்டும் இறங்காதா என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் மீண்டும் உணவுப் பொருட்களின் விலை 40 விழுக்காடு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

போத்தல்களில் அடைக்கப்பட்ட எண்ணெய்க்கான மானியத்தை அரசாங்கம் அண்மையில் அகற்றியது. கோழி, முட்டைகளுக்கான உச்சவரம்பு விலையையும் அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது. 

கோழியின் அடிப்படை விலை 

  • ஏற்கனவே - 8.90ரிங்கிட்
  • இப்போது-  9.40 ரிங்கிட்

ABC Grade முட்டைகளுக்கான விலை....

  • 2 காசு உயர்ந்துள்ளது

5 கிலோ சமையல் எண்ணெய் 

  • ஏற்கனவே - 29 ரிங்கிட்
  • இப்போது -42 ரிங்கிட்

ஆகையால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்கிறார் சிறு வணிகர்கள் சங்கத்தின் தலைவர் முகமட் பாபா குட்டி.

எண்ணெய் விலை அதிகரிப்பால் மலேசியர்களுக்கு விருப்பமான அனைத்துப் பலகாரங்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

'விலையை அதிகரிக்காமல் இருக்க முடியாது'

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் புந்தோங் பகுதி கச்சாங் பூத்தே எனப்படும் கடலை வியாபாரத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.  தற்போது அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

போத்தல்களில் அடைக்கப்பட்ட கலவைக் கடலைகளின் விலை 10 ரிங்கிட்டிலிருந்து 15 ரிங்கிட்டிற்கு அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடலை விற்பனை செய்து வரும் டிஎன்எஸ் உரிமையாளர் சதீஸ் கூறினார்.

"வாடிக்கையாளர்களையும் இழக்க முடியாது. விலையை ஏற்றாமல் இருக்க முடியாது. கலக்கத்துடன் தான் வியாபாரம் செய்கிறோம்."

என்றார் அவர். 

இவ்விலைவாசி உயர்வால் வாடிக்கையாளர்களை விட எங்களைப் போன்ற வணிகர்கள்தான் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் சதீஸ்.

'மூலப் பொருள் விலை முன்னர் ஓராண்டிற்கு ஒருமுறையே உயரும்'
 

மலேசிய முஸ்லிம் உணவகச் சங்கத்தின் தலைவர் ஜவகர் அலி பேசுகையில்..

"பல உணவகங்கள் உணவு விலைகளை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.  எப்போதுமே மூலப் பொருளின் விலைகள்  ஓராண்டிற்கு ஒருமுறை அல்லது இருமுறைதான் உயரும். அதனால் வணிகர்கள் சமாளித்து வந்தார்கள்.  ஆனால் தற்போதைய நிலைமை வழக்கத்திலேயே இல்லாதது."

என்றார்.

"கோதுமை, டின்களில் அடைக்கப்பட்ட பால், தண்ணீர் பால், ஆகியவற்றின் விலை உயர்வால் Milo, Nescafe விலைகளும் அதிகரிக்கின்றன. கோழியின் விலை நிலையற்றதாக இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிக விலையில் கோழி விற்கப்படுவதால், அதைக் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது "

என்று ஜவகர் தெரிவித்தார்.

'வளமுள்ள மலேசியாவில் விவசாயத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கலாம்'

அடிப்படைப் பொருட்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் தொடர வேண்டும் என்ற  கூற்றை அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான ஜெ. கவிராஜன் முன்வைத்தார்.

"மலேசியா ஒரு விவசாய நாடு. இங்கு அனைத்து வளங்களும் அதிகமாகவே உள்ளன. 1970 ஆம் ஆண்டின் முற்பாதியில் மலேசியா முழுமையுமான விவசாய நாடாக இருந்தது. "

"1980 ஆம் ஆண்டில் தொழில்துறை நாடாக மலேசியா உருமாறத் தொடங்கிய போது, விவசாயத் துறையைக் கண்டு கொள்வதைக் குறைத்துக் கொண்டோம். அதுதான் இன்றைய  சூழ்நிலைக்கு முக்கியக் காரணம். மீண்டும் அனைத்து மாநிலங்களிலும்  விவசாயம் சார்ந்த தொழில் துறையை உருவாக்க வேண்டும். மக்களுக்கான அடிப்படை உணவுகளை அரசாங்கமே தருவிக்க வேண்டும்."

அதுவரை அரசாங்கம் மக்களுக்கான உதவித் திட்டத்தைத் தொடர்வது காலத்தின் கட்டாயம் என்றார் கவிராஜன்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்