வட கொரியா வெடிபொருள் சாதனங்களைச் சோதித்துள்ளது - ஐக்கிய நாட்டு நிறுவனம்

(கோப்புப் படம்: Reuters)
வட கொரியா வெடிபொருள் சாதனங்களைச் சோதித்துப் பார்த்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நகல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா புங்கை-ரீ (Punggye-ri) அணுச்சோதனைக் களத்தில் புதிய சுரங்கத்தைத் தோண்டும் பணியைத் தொடங்கியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அணுவாயுதங்களைத் தயாரிப்பதில் கூடுதல் அணுச் சோதனைகளுக்கு வழியமைக்கும் வகையில் வட கொரியா அத்தகைய முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
Nikkei செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஐக்கிய நாட்டு நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் தடையுத்தரவுக் குழுவிடம் அது தொடர்பான ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.
மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்களின் ஆலோசனைக்குப் பிறகு அது வெளியிடப்படும்.
வட கொரியா ஏழாவது அணுவாயுதச் சோதனை நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.