Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

பதுக்கல், விலையேற்றம்... கோழி ஏற்றுமதியை மலேசியா கட்டுப்படுத்த காரணம் என்ன?

வாசிப்புநேரம் -

மலேசியாவில் கோழி இறைச்சி விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. 1 கிலோ கோழியின் அடிப்படை விலை 8.90 ரிங்கிட் என அரசாங்கம் நிர்ணயித்திருந்தாலும், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சந்தைகளில் அது 11 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது.

ஜொகூர் மாநிலத்தில்அது 12 ரிங்கிட் முதல் 14 ரிங்கிட் வரை விற்கப்படுவது மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

மலேசியாவில் விலையேற்றம் காரணமாகக் கோழிகளைப்  பதுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று (23 மே) முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அடுத்த மாதம் (ஜூன் 2022) முதல் தேதி தொடங்கி முழுக் கோழிகளின் ஏற்றுமதிக்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. கோழிகள் உற்பத்தியும் அதன் விலைகளும் நிலைத்தன்மையை எட்டும் வரை ஏற்றுமதித் தடை தொடருமெனத் திரு. இஸ்மாயில் சப்ரி கூறியுள்ளார்.

மலேசியாவில் கோழி வளர்ப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த 25 ஆண்டுகாலமாகக்   கோலாலம்பூரில்  கோழி விற்பனை செய்யும் திரு. ராஜா கூறினார்.

"கடந்த 2 மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. மலேசியாவில் கோழி வளர்க்கும் வர்த்தகம் பெரும் அளவில் சரிவு கண்டுள்ளது. குறிப்பாக ஊழியர்கள் பற்றாக்குறையும் வெகுவாக ஏற்பட்டுள்ளது. அப்படிப் பெரும் அளவில் கோழிகளை வளர்ப்பவர்களும் ஏற்றுமதிக்குத்தான் முன்னுரிமை வழங்குகின்றார்கள். இந்நிலை தொடர்ந்தால் கோழி விலை மேன்மேலும் உயரும்"

என்றார் ராஜா.

கோழி விலை அதிகரிப்பதால், உணவு விலையை உயர்த்த முடியவில்லை என்றார் ஜொகூர் பாரு  Diet Desire Restaurant உரிமையாளர் திரு தங்கமணி.

''மலேசியாவில் கோழி விலை அதிகமாக விற்பது ஜொகூரில்தான். இங்கு உணவகத் தொழில் நடத்துபவர்கள் பல்வேறான இன்னல்களைச் சந்திக்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் சவாலான காலக்கட்டம்''

என்றார் அவர்.

இடைத் தரகர்கள் கோழிகளைப் பதுக்குவதால், பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதனை உடனடியாகத் தடுத்துநிறுத்துவது மிக அவசியம் என்றும் திரு. தங்கமணி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 

"மலேசியாவில் திடீரென இப்பிரச்சினை தலை தூக்கியிருப்பதற்கு விவசாயம் சார்ந்த தொழில்துறைகளில் அதிகம் கவனம் செலுத்தாததுதான் காரணம்"

என மலேசிய இந்தியத் தொழிலியல் சங்கங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏடி குமாரராஜா தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியா தொழில்துறை நாடாக உருவெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியது.

செம்பனை உற்பத்தியைத் தவிர்த்து இதர விவசாயம் சார்ந்த தொழில்துறைகளை முன்னெடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறையத் தொடங்கியது.

இதுவே இன்றைய சூழ்நிலைக்குக் காரணமென அவர் சுட்டிக்காட்டினார்.

"மலேசியா விவசாய நாடு;  முழுமையுமாக விவசாயத் துறையில் கால் பதிக்க வேண்டிய காலக்கட்டம் இதுதான். இப்போது பல இளைஞர்கள் விவசாயத் துறையில் நுழைந்தாலும் அதைச் சந்தைப்படுத்தும் வழிமுறையில் தோல்வியைச் சந்திக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் உடனடித் தீர்வுகாணும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் மலேசியா மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும்" என்று திரு.  குமாரராஜா எச்சரித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்