Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு; மலேசிய மக்கள் அவதி

வாசிப்புநேரம் -

மலேசியாவில் உணவுப் பொருள்களின் விலையேற்றம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதை அடுத்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை நகர்த்துகின்றனர். 

முன்பிருந்ததைவிட தற்போது பெரும்பாலான பொருள்களின் விலை மும்மடங்கு அதிகரித்துவிட்டது. காய்கறிகள், சமையல் எண்ணெய், மீன், கோழி, அரிசி எனப் பெரும்பாலான பொருள்கள் விலையேற்றம் கண்டுள்ளன. 

முன்பெல்லாம் சந்தைக்குச் செல்ல வெறும் 50 ரிங்கிட் போதும். ஆனால் இப்போது ஒருமுறைக்கு 150 ரிங்கிட்டில் இருந்து 200 ரிங்கிட் வரை தேவைப்படுவதாகக் கூறுகிறார் தலைநகர்-ஜாலான் சன் பெங் (Jalan San Peng) வட்டாரத்தில் வசிக்கும்  56 வயது திருமதி.சரஸ்வதி.

“மீன் சாப்பிடவே பயமாக உள்ளது. அந்தளவுக்கு விலை அதிகம். கோழியின் விலை குறையவே இல்லை. ஆட்டிறைச்சி, நண்டு, கணவாய், இறால் போன்ற உணவுவகைகளை வாங்கியே பல மாதங்கள் ஆகிவிட்டன. காய்கறிகளின் விலைகூட கணிசமாக அதிகரித்துவிட்டது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் சாமான்ய மக்களின் நிலைதான் என்ன?”

என்கிறார் திருமதி.சரஸ்வதி. 

சிலாங்கூர், காஜாங்-கில் வசிக்கும் திருமதி.காமாட்சி நல்லதம்பி-யும் ‘செய்தி’யிடம் தனது மனக்குமுறுலைக் கொட்டித் தீர்த்தார். 

“வருமானம் உயரவில்லை. ஆனால் பொருள்களின் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே போகிறது. ஒரு கிலோ 2.00 ரிங்கிட்டுக்கு விற்ற காய்கறிகள், இன்று கிலோ 6.00 ரிங்கிட். முன்பு கடையில் உணவு வாங்கினால் இருவர் உண்ண முடியும். இப்போது ஒரு பொட்டல உணவு, ஒருவருக்கே போதவில்லை.

என் பிள்ளைகள் அனைவரும் வேலைசெய்கின்றனர். இருந்தும் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. Covid-19 நோய்ப்பரவல் தொடங்கிய பின்னர் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் விலைவாசி உயர்வும் கழுத்தை நெரிக்கிறது. எப்படிதான் இதிலிருந்து மீண்டுவரப் போகிறோம் எனத் தெரியவில்லை” எனப் புலம்பித் தள்ளினார் 60 வயது திருமதி.காமாட்சி. 


இந்த விலைவாசி உயர்வு ஏறக்குறைய நிரந்தரமானது என்கிறார் விவசாயியும் வியாபாரியுமான திரு.தினேஷ் சுப்பையா.

தற்போதைய விலைவாசி உயர்வுக்குப் பல காரணங்களை முன்வைக்கிறார் திரு. தினேஷ். “தேவை அதிகரிப்பு (high demand), உற்பத்தி குறைவு, ஆள் பற்றாக்குறை, உரம்-தீவனங்களின் விலையேற்றம், உற்பத்திச் செலவுகள் இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு மத்தியில் மழை-வெள்ளம் போன்ற பிரச்சினைகள். 

மலேசியா மட்டுமல்ல, எல்லா உலக நாடுகளும் இந்த விலைவாசி உயர்வுப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கின்றன. எனவே இதில் நாம் அரசாங்கத்தைக் குறைகூறி எந்தப் பயனும் இல்லை” என்கிறார் திரு.தினேஷ். 
 
உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்பட்டுத்த அரசாங்கம், AP (Approved Permit) அனுமதி வழங்குவதை ரத்துசெய்ய வேண்டும் என FOMCA எனப்படும் மலேசியப் பயனீட்டாளர் சங்கச் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் மாரிமுத்து நடேசன் கூறினார். 


மலேசியாவில் பெரும்பாலான உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுபவை. அவ்வாறு இறக்குமதி செய்ய ஒவ்வொரு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு AP அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த AP அனுமதி சம்பந்தப்பட்ட தரப்பினர் மட்டும் விலையை நிர்ணயிக்க இடமளித்து விடுகிறது. 

எனவே அரசாங்கம் இந்த AP அனுமதியை அகற்றிவிட்டுத் தடையற்ற-சுதந்திரமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவேண்டும். அவ்வாறு செய்வதால் உணவுப் பொருள்களின் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியும். அதோடு ஒரு சாராரின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்” என டாக்டர் மாரிமுத்து விவரித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்