ஜப்பானுடன் இருக்கும் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறது சிங்கப்பூர்

(கோப்புப் படம்: TODAY)
சிங்கப்பூர், ஜப்பானுடன் கொண்டுள்ள இரு தரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறது.
இரு நாடுகளுக்கும் பலன் தரக்கூடிய அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் வழி அதைச் சாத்தியமாக்குவது திட்டம்.
சிங்கப்பூர், ஜப்பானுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறினார்.
வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் வளப்பத்துக்கும் ஜப்பான் கூடுதலாகப் பங்களிக்க அது உதவும் என்றார் அவர்.
ஜப்பானுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு. வோங் செய்தியாளர்களிடம் பேசினார். நாளையுடன் அவரின் ஜப்பானியப் பயணம் நிறைவுறுகிறது.
சிங்கப்பூரர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் இடங்களில் ஜப்பானும் ஒன்று. சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும் சிங்கப்பூரிலிருந்து அங்கு 60,000துக்கும் மேற்பட்டோர் சென்றனர்.
சுற்றுப்பயணத்துக்கு அப்பால், நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கத் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளிலும் ஒத்துழைக்கலாம் என்று திரு. வோங் குறிப்பிட்டார்.
ஜப்பானிய நிறுவனங்கள், சிங்கப்பூரை ஒரு நுழைவாயிலாகப் பயன்படுத்தி, இந்த வட்டாரத்தில் கிளை பரப்பலாம் என்றார் அவர்.