"பயிர்களை எரிக்கும் வழக்கம் தடை செய்யப்படவேண்டும்" - தாய்லந்தில் கோரிக்கை

(படம்: AFP/Jack TAYLOR)
விவசாயிகள் பயிர்களை எரிப்பதைத் தாய்லந்து தடைசெய்யவேண்டும் என்று வேளாண்மை அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது.
தாய்லந்தில் காற்றுத் தூய்மைக்கேட்டால் பல மில்லியன் மக்கள் மருத்துவச் சிகிச்சையை நாடும் அளவுக்கு நிலைமை மாறியிருப்பதை அது சுட்டியது.
இந்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் தாய்லந்தில் காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினை தலைதூக்கியது.
உலகில் அதிகத் தூய்மைக்கேடு மிக்க நகரங்களின் வரிசையில் அண்மையில் பேங்காக், சியாங் மாய் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
தாய்லந்தில் அடுத்த விளைச்சலுக்காக நிலத்தைத் தயார்செய்ய விவசாயிகள் ஏற்கனவே விளைந்த பயிர்களை எரிப்பது வழக்கம். காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட முக்கியக் காரணங்களில் அதுவும் ஒன்று என அமைப்பு கூறியது.
ஆண்டுதோறும் டிசம்பருக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடையே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது.
அதற்கான அவசியம் கருதி, அரசாங்கமும் புதிய பிரதமர் செட்டா தர்வீசினும் (Srettha Thavisin) விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றது அமைப்பு.
-AFP