Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் 10ஆவது பிரதமராகப் பொறுப்பேற்கும் அன்வார் இப்ராஹிம் - யார் இவர்?

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 10ஆவது பிரதமராகப் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) பதவியேற்றுக்கொண்டுள்ளார். 

மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் முடிந்து 5 நாளான நிலையில் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்திருக்கிறது. 

அன்வார் இப்ராஹிம் யார்? அவரது அரசியல் பின்னணி என்ன? 

தகவல்களைத் திரட்டியது ‘செய்தி’.

மலேசிய அரசியலைப் பொறுத்தவரை மிகக் கடினமான அரசியல் வாழ்க்கையைக் கொண்டவராகத் திரு. அன்வார் கருதப்படுகிறார்.

பலமுறை பிரதமராக முயற்சி செய்து கைகூடாமல் போனவர் திரு.அன்வார்.

(AP / Vincent Thian)

தொடக்க காலம், கிடுகிடு முன்னேற்றம்:  
 
மலேசியாவின் இஸ்லாமிய இளைஞர் இயக்கமான 
ABIM ஐ உருவாக்கி அதன் இளைய தலைவரானார்.  

1982ஆம் ஆண்டு மலேசியாவை நீண்டகாலமாக ஆண்ட அம்னோவில் (UMNO) இணைந்தார்.  

அவரது அரசியல் வாழ்க்கை வேகம் நிறைந்தது. 
பல அமைச்சர் பதவிகளை வகித்தார்.

1993ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமதுவின் கீழ் துணைப்பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போதே திரு.அன்வார்தான் அடுத்த பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றங்கள் ஆகியவற்றால் அது கைகூடவில்லை. 

சிறை வாழ்க்கை:

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாக்டர் மகாதீருக்கு எதிராகக் குரல்கொடுத்ததை அடுத்து திரு.அன்வார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கினார்.

கைது செய்யப்பட்டார். ஊழல், ஓரினப்புணர்ச்சி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

அவருக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுந்தன. 
ஊழல் தொடர்பில் அவர் 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு கழித்து ஓரினப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  

2004ஆம் ஆண்டு பிற்பகுதியில் மலேசிய உச்சநீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டை ரத்து செய்து அவரை சிறையிலிருந்து விடுவித்தது. 

எதிர்க்கட்சியாக உருவெடுத்தார்:

சிறையில் இருந்து விடுதலையான பிறகு வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். 

2008ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கெதிராக ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியலில் இருந்து தம்மை  ஓரங்கட்ட அவை நிகழ்வதாக அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டு திரு அன்வாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது.

ஆனால் அது நிலைக்கவில்லை. 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடத் திரு.அன்வார் தயாரானபோது அவருக்கெதிரான முந்தையக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.  

(CNA)

அரசியல் மறுபிரவேசம்: 

2016ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்குத் திரும்பப்போவதாக டாக்டர் மகாதீர் அறிவித்தார். 

அப்போது சிறையில் இருந்த திரு.அன்வாரிடம் கைகுலுக்கி டாக்டர் மகாதீர் தமது பழைய உறவைப் புதுப்பித்தார். 

அன்வாரைப் பொது மன்னிப்பு மூலம் சிறையில் இருந்து வெளியே கொண்டுவரும் வாக்குறுதியையும் டாக்டர் மகாதீர் நிறைவேற்றினார். 

அதன் விளைவாக 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் டாக்டர் மகாதீர் வழிநடத்திய பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியில் திரு அன்வாரின் கெ அடிலான் கட்சி இணைந்தது. தேசிய முன்னணியின் 60 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியைக் கவிழ்த்தது.

ஈராண்டுக்குப் பிறகு அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக மகாதீர் அறிவித்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு சற்றும் எதிர்பாராமல் டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 

கூட்டணி உடைந்தது. பிரதமராக வேண்டுமென்ற அன்வாரின் கனவு மீண்டும் சிதைந்தது.

(கோப்புப் படம்: AFP/Mohd Rasfan)

அண்மைத் தேர்தல்

அண்மையில் நடந்த மலேசியாவின் 15ஆவது 
பொதுத்தேர்தலில் DAP, UPKO, Amanah கட்சிகளுடன் இணைந்து அவரது PKR கட்சி களமிறங்கியது. 

81 இடங்களைக் கைப்பற்றியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்