Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

உலக அளவில் உயர்ந்தாலும் மலேசியாவில் மட்டும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை...ஏன்?

வாசிப்புநேரம் -

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. 

உலக அளவில் பிரச்சினை பெரிதாக உருவெடுத்தாலும் மலேசியாவில் ரோன் 95 பெட்ரொல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அது தொடர்ந்து லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டாகவே (0.64 வெள்ளி) உள்ளது.

ரோன் 97 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 4.72 ரிங்கிட்டாக (1.47 வெள்ளி ) உயர்த்தப்பட்டுள்ளது. 

டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக (வெள்ளி 0.67) உள்ளது.

கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது முதல் இப்போது வரை  பெட்ரோல்,  டீசல், சமையல் திரவ எரிவாயு (GAS) ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித்தொகை (Subsidy) 10 மடங்கு அதிகரித்துள்ளது. 

2021 ஜனவரியில் 200 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த உதவித்தொகை, 2022 ஜனவரியில் 2 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதை மலேசிய நிதி அமைச்சர் தெங்கு ஸப்ரூல் அப்துல் அசீஸ் (Tengku Zafrul Abdul Aziz) அண்மையில் தெரிவித்தார். 

ரஷ்யா- உக்ரேன் இடையிலான போரால் பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது. 

மலேசியாவில் அடிப்படைப் பொருள்களின் அனைத்து விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல் விலையை மட்டும் அரசாங்கம் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இது எப்படிச் சாத்தியம் என்பதை ஆராய்ந்தது 'செய்தி'.

மலேசியாவில் கோழி, இறைச்சி, காய்கறிகள், சமையல் எண்ணெய் உட்பட அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இந்நிலையில் பெட்ரொல் விலையும் உயர்ந்தால் அது அரசாங்கத்திற்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்பதைப் பிரதமர் உணர்ந்துள்ளார் என்றார் பொருளாதார வல்லுநர் மதுரைவீரன் மாரிமுத்து. 

அதேசமயம், 2011ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவில் நுழையும்போது ரோன் 95 வகை பெட்ரோலை வாங்கமுடியாது என்ற தடை இன்னமும் நடப்பில் உள்ளது என்பதைச் சுட்டினார், மூத்த பத்திரிகையாளர் பத்மநாபன்.

மலேசியா - சிங்கப்பூர் எல்லை திறக்கப்பட்டதால் பலர்  பெட்ரோலை நிரப்புவதற்காக மலேசியாவிற்கு வருகிறார்கள். காரணம் உலக அரங்கில் அதிகக் குறைவான விலையில் பெட்ரோலை வழங்குவது மலேசியாதான் என்றார் அவர்.

கடந்த ஆண்டு அரசாங்கம் வழங்கிய மொத்த மானியம் சுமார் 11 பில்லியன் ரிங்கிட்.

ஆனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கு அதிகமானால், 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த மானியம் 28 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது என்றார் அரசியல் பார்வையாளரும் வழக்கறிஞருமான கோகிலவாணி.

"பொதுத் தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுமென்ற வாக்குறுதி நிச்சயம் இடம்பெற்றிருக்கும். 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் இந்த வாக்குறுதி முன்னிறுத்தப்பட்டிருந்தது. 

அதன் பிறகு 3 முறை அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழலில் பெட்ரோல் விலை உயர்ந்தால் அது நடப்பு அரசாங்கத்திற்குப் பெரும் பாதகத்தை உண்டாக்கும்" என்றார் திருவாட்டி கோகிலவாணி.

மொத்தத்தில் மலேசியாவில் இதே குறைவான விலையில் பெட்ரோலைத் தொடர்ந்து விற்பது சாத்தியமல்ல. 

பெட்ரோல் விலையில் நிச்சயம் மாற்றம் வரும்; இப்போது மகிழ்ச்சியாக  இருக்கும் மலேசியர்களின் ஒரே கேள்வி, "அது எத்தனை ரிங்கிட் உயரப் போகிறது? எப்போது உயரப் போகிறது?" என்பது மட்டுமே.

அதற்கு மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் பதிலளிக்கும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்