Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

'மலேசியாவில் புதிய அரசாங்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'

வாசிப்புநேரம் -
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல்
முடிவுகள் சற்றும் எதிர்பாராத ஒன்று எனக் கூறுகின்றனர் மலேசிய இளையர் பிரதிநிதிகள்.

குறிப்பாக தேசிய முன்னணியின் மோசமான பின்னடைவு சற்றும் எதிர்பார்க்கப்படாத ஒன்று என்கிறார் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் தனேஷ் பேசில். கைரி ஜமாலுதின், ரிசால் மெரிக்கான், மஹாட்சிர் காலிட் உள்ளிட்ட தேசிய முன்னணியின் சில முக்கியப் பெயர்களை அவர் சுட்டினார்.
 
மலேசிய இந்திய இளைஞர் மன்றத் தலைவர் தனேஷ் பேசில்


"இளைஞர்களின் பிரதிநிதி என்ற முறையில் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி - பக்கத்தான் ஹராப்பானுக்கு இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், பெரிக்கத்தான் நேசனலின் எழுச்சி அக்கருத்தை மாற்றிவிட்டது. மலேசியாவில் எந்தக் கட்சி யாருடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்,"

என தனேஷ் தெரிவித்தார். 

பொதுத்தேர்தலில் இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் தனேஷ் சொன்னார். 

"ஒருவேளை இளைய வாக்களர்களின் தாக்கம் இல்லையென்றால் பொதுத்தேர்தல் முடிவுகள் எப்போதும் போல முன்கூட்டியே கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. 14ஆவது பொதுத்தேர்தல் முடிவுகளைக் காட்டிலும் 15ஆவது பொதுத்தேர்தல் முடிவுகள் இன்னும் அதிர்ச்சியளிக்கின்றன,"

என்றார் அவர். 

தோற்றுப்போன அரசியல் தலைவர்கள் தங்களது கட்சியிலுள்ள பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைச் சரிசெய்ய முற்படவேண்டும் என்பதே இளையர்களின் விருப்பம் என்று தனேஷ் சொன்னார்.

அரசியல் கவனிப்பாளர், ஷர்மின் சிவராமன்

இந்தப் பொதுத்தேர்தல் மலேசியாவில் குறிப்பாக இளையர்கள் மத்தியில் புதிய அரசியல் கண்ணோட்டத்தை உருவாக்கியிருப்பதாக இளம் அரசியல் கவனிப்பாளர் ஷர்மின் சிவராமன் 
'செய்தி' இடம் தெரிவித்தார். 

"தேர்தலின்போது நான் நேரில் சந்தித்த பல இளைஞர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் தலைவர்கள் ஆற்றல்மிக்கவர்களாகவும் துடிப்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனடிப்படையில் இளையோரின் வாக்குகள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை உணர முடிகிறது,"

இதற்கு முன் மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த தரவுகளில்கூட 18 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுகொண்ட இளையர்களில் ஏறக்குறைய 51 விழுக்காட்டினர் மலேசிய அரசியலை மாற்றியமைக்கக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் ஷர்மின் சுட்டினார்.

கட்சிகளும் கூட்டணிகளும் மக்களின் நலன் கருதி விட்டுக்கொடுத்துச் செல்வதோடு சிறந்த அரசாங்கத்தை அமைப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே இளையர்களின் எதிர்பார்ப்பு என்று ஷர்மின் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்