Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

கழுத்தை நெரிக்கும் விலையேற்றம் - சமாளிக்க முடியாமல் திணறும் மலேசிய உணவகங்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் பெரும்பாலான மளிகைப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்திருப்பதை அடுத்து, உணவுக் கடைக்காரர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மளிகைப் பொருள்களின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல உணவகங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்தக்கூடிய அல்லது பரிமாறும் உணவின் அளவைக் குறைக்கக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நிலைமையைச் சமாளிக்க, வேறு வழியில்லை என்கிறார் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு. J.கோவிந்தசாமி. 

"எண்ணெய், பருப்பு, இறைச்சி, காய்கறிகள் எனச் சமையலுக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களும் விலையேற்றம் கண்டுள்ளன. மிளகு, சீரகம், இலவங்கம், பட்டை உள்ளிட்ட நறுமணப் பொருள்களையும் மசாலா பொருள்களையும் இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான கப்பல் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதில் ஆள்பற்றாக்குறை வேறு.

தொழிலாளர்களைத் தொடர்ந்து தக்கவைக்க, சம்பளத்தை உயர்த்தியாக வேண்டிய நிர்பந்தம். அதனால் உணவுப் பொருள் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயம்” 

என்றார் திரு.கோவிந்தசாமி.

“உணவின் அளவைக் குறைத்தாலும் நட்டத்தை ஈடு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது."

"3 மாதங்களுக்கு முன்பே உணவகங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்தியிருக்க வேண்டும். நாங்களும் முடிந்தவரை சமாளித்தோம். ஆனால், வேறு வழியே இல்லாமல்தான் உணவுப் பதார்த்தங்களின் விலை உயர்த்தப்படுகிறது அல்லது பரிமாறப்படும் உணவுப் பதார்த்தத்தின் அளவு குறைக்கப்படுகிறது." 

"உணவகங்கள் எதிர்நோக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புரிந்து கொண்டிருப்பது, எங்களுக்குச் சற்று ஆறுதலாக உள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி உணவகங்களும்  குறைந்தபட்ச அளவில்தான் உணவு விலையை உயர்த்தியிருக்கின்றன” 

என்றும் திரு.கோவிந்தசாமி குறிப்பிட்டார். 

விலைவாசி உயர்வு கழுத்தை நெரிக்கிறது...

இதற்கிடையே லாபமில்லாத சூழ்நிலையிலேயே உணவுத் தொழிலை நடத்தி வருவதாகக் கூறுகிறார், ஜொகூரின் டாங்கா உத்தமாவில் (Danga Utama) உணவகம் நடத்தி வரும் திரு.முகமது யாசின். 

“உணவுப் பொருளின் விலையைச் சற்று அதிகரித்தால்தான், நிலைமையைச் சமாளிக்க முடியும். இப்போதைக்குச் சில உணவு வகைகளின் விலையை 20 காசுவரை உயர்த்தியுள்ளேன். உணவின் அளவைக் குறைக்கவில்லை. அதோடு பெரும்பாலான உணவுப் பதார்த்தங்களை அதே விலையில்தான் விற்கிறோம்” 

என்றார் அவர். 

“நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தபோது உணவகத் துறை பெரும் இழப்பை எதிர்நோக்கியது. அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும்போது விலைவாசி உயர்வு எங்களது கழுத்தை நெரிக்கிறது” 

என வேதனையுடன் திரு. முகமது யாசின் கூறினார். 

சமாளிக்க முடியவில்லை, ஆனால் மாற்றங்கள் செய்யவில்லை...

கோலாலம்பூர், புடுவிலுள்ள (Pudu) ஜாலான் கஜாவில் (Jalan Gajah) உணவுக்கடை நடத்தி வரும் திருமதி கிறிஸ்டினா தேவியையும் ‘செய்தி’ சந்தித்தது. 

“விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், நாங்கள் கடையைத் திறந்து 8 மாதம்தான் ஆகிறது. உணவுப் பதார்த்தங்களின் விலையை உயர்த்தினாலோ, அளவைக் குறைத்தாலோ வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். அதற்கு அஞ்சி, எங்கள் கடையில் உணவுப் பொருள் விலையையும் உயர்த்தவில்லை, அளவையும் குறைக்கவில்லை."

"எனினும் உணவுப் பொருள்களின் விலையைச் சற்று அதிகரித்தால்தான் எங்களால் தொடர்ந்து இயங்க முடியும்."

"நிலைமையறிந்து வாடிக்கையாளர்கள் சிலர், கொடுக்க வேண்டிய பணத்தை விடச் சற்று அதிகமாகக் கொடுத்துச் செல்வதும் உண்டு” 

என்றார் திருமதி கிறிஸ்டினா. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்