Images
  • doctors
    (படம்: AFP/Manan VATSYAYANA)

நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலையே அவருக்குத் தலையணையாகக் கொடுத்த மருத்துவர்கள்

புதுடில்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிக்கு, அவரது துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக வைத்த மருத்துவர்கள் இருவர் மீது விரசாரணை தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஜான்சி என்னும் நகரிலுள்ள அரசாக்கப் பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார் 28-வயது கன்ஷாம்.

பேருந்து விபத்தில் சிக்கிய அவரது கால் துண்டிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அவருக்குத் தலையணை வழங்குமாறு கேட்டுக்கொண்ட உறவினர்களின் கோரிக்கையை, மருத்துவமனை ஊழியர்கள் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

சற்று நேரத்தில் கன்ஷாமின் தலையில் அவரது துண்டிக்கப்பட்ட கால் தலையணையாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்த உறவினர்கள் அதுபற்றி மருத்துவர்களிடம் புகார் செய்தனர்.

ஆனால் மருத்துவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என, NDTVக்கு அளித்த நேர்காணலில் உறவினர்கள் கூறினர்.

பின்னர் உறவினர்கள் தங்கள் சொந்தச் செலவில் தலையணை ஒன்றை வாங்கி கன்ஷாமிற்கு அளித்தனர்.

துண்டிக்கப்பட்ட கால் தலையணையாகப் பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் படங்கள் சில வெளியானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையின்போது நோயாளியின் உறவினர்கள்தான் துண்டிக்கப்பட்ட காலைத் தலையணையாய்ப் பயன்படுத்தியதாக மருத்துவர்கள் கூறினர்.

விசாரணையின் கீழ் இருக்கும் இரு மருத்துவர்களும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
 

Top