Images
  • summit (1)

வட கொரியத் தலைவரே வெற்றியாளர்-கவனிப்பாளர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், வட கொரியத் தலைவர் கிம்முக்கும் இடையே நேற்று (ஜூன் 12) நடைபெற்ற உச்சநிலைச் சந்திப்பில் ஆக அதிகச் சலுகைகளைப் பெற்று வெற்றியடைந்திருப்பது திரு. கிம்தான் என்று கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இருவரும் கையெழுத்திட்ட ஆவணத்தின் மூலம் திரு. டிரம்ப் சாதித்தது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.

திரு. டிரம்ப்புடன் நடத்திய முதலாவது சந்திப்பிலேயே, தமக்கு என்னென்ன வேண்டுமோ அதில் பெரும்பாலானவற்றைத் திரு. கிம் சாதித்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.

உலக அரங்கில், ஓர் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது...

அமெரிக்க-தென் கொரியப் போர்ப் பயிற்சிகளை நிறுத்துவதாகத்
திரு. டிரம்ப்பிடம் இருந்து பெற்ற வாய்மொழி உறுதி...

வட கொரியாவுக்கான பாதுகாப்பு உத்தரவாதம்...

மனித உரிமை மீறல் விவகாரத்தில் எவ்வித நெருக்கடியும் அளிக்கப்படாதது...

-ஆகிய அம்சங்களை கவனிப்பாளர்கள் சுட்டினர்.

அணுவாயுதக் களைவைப் பொறுத்தவரை, அது சரிபார்க்கத்தக்க, திரும்பிச் செல்ல முடியாத நிரந்தரக் களைவாக இருக்கவேண்டும் என்பதைத்தான் அதிபர் டிரம்ப் பெரிதும் வலியுறுத்தி வந்தார்.

ஆனால், நேற்றைய ஆவணத்தில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், வட கொரியாவின் ஏவுகணைகள் குறித்தும் உடன்பாட்டில் இல்லை.

அடுத்த சந்திப்புக்குரிய திட்டவட்டமான தேதி கூட, குறிக்கப்படவில்லை என்பதை கவனிப்பாளர்கள் வியப்புடன் சுட்டினர்.

தொடக்கத்திலிருந்தே வட கொரியா இதைத்தான் எதிர்பார்த்தது என்றும், அமெரிக்கா அதை எப்படி அனுமதித்தது என்றும், தம்மால் இன்னமும் நம்பமுடியவில்லை என்றார், அமெரிக்க வெளியுறவு அமைச்சின் முன்னாள் அதிகாரியான திரு. ஜோசஃப் யுன். (Joseph Yun)

இத்தனை மாத சமரசப் பேச்சும் இதற்குத்தானா ? என்று அவர் வினா எழுப்பினார்.

ஆனால், உச்சநிலைச் சந்திப்பின் முடிவு பற்றித் தம்மைக் குறைகூறுவோரைத் திரு. டிரம்ப் சாடியுள்ளார்.

வட கொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தலை, அரசதந்திர முயற்சிகள் மூலம் தாம் அகற்றியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இருதரப்புப் பதற்றத்தை இந்தச் சந்திப்பு குறைத்திருப்பதால் "இது ஒரு வெற்றிகரமான சந்திப்பே" என்பது திரு. டிரம்ப்பின் வாதம்.

அமெரிக்காவுடன் மோதல் போக்கைத் தொடரக் கூடாது என்று திரு. கிம் உண்மையாகவே விரும்புவதை அவரோடு இருந்த மூன்று மணி நேரத்தில் தம்மால் உணர முடிந்ததாகத் திரு. டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

Top