சொந்த மகளிடம் 623 முறை பாலியல் குற்றம் புரிந்த மலேசிய ஆடவரின் சிறைத் தண்டனை குறைப்பு
மலேசியாவில் சொந்த மகளைப் பாலியல் ரீதியாய்த் துன்புறுத்தியதாக 623 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஆடவரின் சிறைத்தண்டனை 48 ஆண்டுகளிலிருந்து 40 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது 15 வயது மகளைப் பல்வேறு வழிகளில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்தை அந்த 37 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் விதிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைவிடுத்திருந்தார்.
மலேசியாவில், நூற்றுக்கணக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய முதல் ஆடவர் அவர்தான்.
நீதிபதி நேற்று (அக்டோபர் 13) ஆடவரின் சிறை அவகாசத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டார். ஆனால் விதிக்கப்பட்ட 24 பிரம்படிகளில் எந்த மாற்றமும் இல்லை.
2016இல் அந்தக் குற்றச்செயல்கள் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனைவியிடமிருந்து விவாகாரத்துப் பெற்றிருந்த ஆடவரின் பொறுப்பில் மூத்த மகள் இருந்தார்.
இரண்டு தங்கைகளையும் தம்முடன் தங்க வைத்துக்கொள்ள தந்தை திட்டமிட்டிருந்தது தெரியவந்ததும், பாதிக்கப்பட்ட மகள் தாயாரிடம் தந்தையின் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கூறினார்.
அதைத் தொடர்ந்து தாயார் கடந்த ஆண்டு ஜூலையில் காவல்துறையிடம் புகார் பதிவு செய்தார்.
10 ஆண்டு மறுவாழ்வு ஆலோசனை பெற ஆடவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆடவரின் சிறைத்தண்டனை முடிந்ததும் அவர் மூன்று ஆண்டுகளுக்குக் காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பார்.
ஆடவர் தனது மகளுக்கு 10,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டும். இல்லையேல் அவரது சிறைத்தண்டனை 12 மாதம் நீட்டிக்கப்படும்.
மேலும் அவர் 6 மாதக் காலத்திற்குள் 240 மணி நேரத் தொண்டூழியத்தில் ஈடுபட வேண்டும்.

