Images
  • anwar (2)

'போர்ட் டிக்சன் தொகுதியில் எதிர்பார்ப்பை விஞ்சிய வெற்றி' - அன்வார் இப்ராஹிம்

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி தமது எதிர்பார்ப்புகளை விஞ்சியதாகக் கூறியுள்ளார் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திரு. அன்வார் இப்ராஹிம்.

நேற்று (13 அக்டோபர்) நடைபெற்ற போர்ட் டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அவரது கூட்டணி 70 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி பெற்ற 48 விழுக்காட்டு வாக்குகளை விட அது கணிசமாக அதிகம்.


மலாய், சீன, இந்திய, ஓராங் அஸ்லி பழங்குடி இனத்தவரில் அவரவர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலும்கூட தமது கூட்டணி எல்லா இனத்தவரின் நம்பிக்கையையும் பெறமுடிந்துள்ளதாக அவர் கூறினார்.

தம்முடன் போட்டியிட்ட 6 வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி
31,016 வாக்குகளைப் பெற்று திரு. அன்வார் வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்த நிலையில் வந்த பாஸ் கட்சியின் நசாரி மொக்தார் 7,456 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

23,560 வாக்கு வித்தியாசத்தில் திரு. அன்வார் வெற்றி பெற்றார்.

கடந்த பொதுத் தேர்தலைவிட இம்முறை பக்கட்டான் ஹரப்பான் கூட்டணிக்குக் கிடைத்த மலேசிய ஆயுதப் படையைச் சேர்ந்தோரின் வாக்குகள் 122 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை (15 அக்டோபர்) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள திரு. அன்வார் போர்ட் டிக்சன் தொகுதிக்குச் சிறந்த சேவையளிக்க
உறுதி கூறினார்.

ஏனைய உறுப்பினர்களோடு சேர்ந்து, நாடாளுமன்றத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரவிருப்பதாகத் திரு. அன்வார் சொன்னார்.

கூட்டணியிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், பிரதமர் மகாதீர் தமது வெற்றியைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
 

Top