Images
  • anwar (2)
    (கோப்புப் படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசிய மாமன்னர் பிரகடனப்படுத்திய நெருக்கடிநிலையை மீட்டுக்கொள்ளக் கடிதம் எழுதுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திரு. அன்வார்

மலேசியாவில், மாமன்னர் பிரகடனப்படுத்தியுள்ள நெருக்கடிநிலையை மீட்டுக்கொள்வது குறித்து அவருக்குக் கடிதம் எழுதுமாறு, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஆகக் கூடிய விரைவில் கூட்டுவதற்காக, நெருக்கடிநிலையை மீட்டுக்கொள்ள மன்னரிடம் முறையிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நெருக்கடிநிலை, COVID-19, பொருளியல் நெருக்கடி-ஆகியவை குறித்து விவாதிக்க, நாடாளுமன்றம் இம்மாதம் 31ஆம் தேதிக்குமுன் கூடவேண்டுமென, திரு. அன்வார் இன்று வெளியிட்ட அறிக்கை கேட்டுக்கொண்டது.

மன்னருக்கு அனுப்பும் கடிதத்தில் என்னென்ன இடம்பெறவேண்டும் என்பது குறித்த நகல் கடிதம் ஒன்றைத் தாம் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்சியும் அல்லது மன்ற உறுப்பினர்களும், அந்தக் கடிதத்தில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து, நாளைக்குள் மாமன்னருக்கு அதை அனுப்பி வைக்கும்படித் திரு. அன்வார் கேட்டுக்கொண்டார்.

மலேசிய மாமன்னர், கடந்த செவ்வாய்கிழமை நெருக்கடி நிலையை அறிவித்தார்.

அது, ஆகஸ்ட் மாதம் முதல்-தேதி வரை நடப்பிலிருக்கும். கிருமிப்பரவல் நிலவரம் மேம்பட்டால், அதற்கு முன்னரே கூட, நெருக்கடிநிலை மீட்டுக்கொள்ளப்படலாம்.

நெருக்கடிநிலைப் பிரகடனம் காரணமாக மலேசியாவில் நாடாளுமன்றக் கூட்டங்களோ, பொதுத் தேர்தலோ, மாநிலத் தேர்தலோ நடைபெறாது என்று பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்திருந்தார்.  

Top