Images
  • ayodhi
    ( படம்: AFP )

அயோத்தி நில உரிமைச் சர்ச்சைத் தொடர்பான வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது

புதுடில்லி: பல நூற்றாண்டாக நீடிக்கும் அயோத்தி நில உரிமைச் சர்ச்சைத் தொடர்பான வழக்கு விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கவிருக்கிறது.

முன்னதாக, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சுமார் 11ஆயிரம் சதுர-மீட்டர் பரப்பளவின் உரிமை தொடர்பில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சர்ச்சை நீடிக்கிறது.

8 ஆண்டுகளுக்கு முன்னர், மூன்றில்-இரண்டு பங்கு நிலம் இந்துக்களுக்கும், எஞ்சிய ஒரு பங்கு நிலப் பகுதி முஸ்லிம்களுக்கும் சொந்தம் என, அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இரு தரப்பினரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த புனிதமான நிலப்பகுதி இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆனால் அங்கு அமைந்திருந்த பாபர் மசூதியில், பல நூற்றாண்டாகத் தாங்கள் வழிபட்டு வருவதாக வலியுறுத்துகின்றனர் முஸ்லிம்கள்.

1992ஆம் ஆண்டு, அது இடிக்கப்பட்டதையடுத்து பதற்றம் அதிகரித்தது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வழக்கில் உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்பு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

Top