Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அயோத்தி - இந்துக்களிடம் நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை முழுமையாக, இந்துக்களிடம் ஒப்படைக்குமாறு, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அயோத்தி - இந்துக்களிடம் நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

(படம்: AFP / Sanjay Kanojia)

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை முழுமையாக, இந்துக்களிடம் ஒப்படைக்குமாறு, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிலத்தின் உரிமை தொடர்பாக இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பல்லாண்டுகளாகச் சர்ச்சை நீடித்து வந்தது.

இந்நிலையில், மசூதி கட்டுவதற்காக வேறோர் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில்தான் இந்துக் கடவுள் ராமர் பிறந்தார் என்பது இந்துகள் பலரின் நம்பிக்கை.

ஆனால் அங்கிருந்த பாபர் மசூதியில், பல தலைமுறைகளாக வழிபட்டு வந்ததை முஸ்லிம்கள் வலியுறுத்தினர்.

16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி, 1992ஆம் ஆண்டில் கலகக்காரர்களால் இடிக்கப்பட்டபோது கலவரம் மூண்டதில் சுமார் 2,000 பேர் மாண்டனர்.

இடிக்கப்பட்ட மசூதிக்குக் கீழே இந்து ஆலயம் ஒன்று இருந்ததற்கான சான்றுகளை இந்தியத் தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழு, ஒருமனதாக நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்துக்களின் விருப்பப்படி ராமருக்கு ஆலயம் எழுப்ப, சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆலயக் கட்டுமானம், நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக மத்திய அரசாங்கம், குழு ஒன்றை நிறுவ வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதமான செயல் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

அதைத் தொடர்ந்து வன்முறை அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் அயோத்தியில் நூற்றுக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோர் நகரமெங்கும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் கருத்துகளைக் காவல்துறை கண்காணித்து வருகிறது. எதிர்மறையான சில கருத்துகளை அகற்றுமாறு காவல்துறை கோரியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அரசியல் தலைவர்களும் மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்