Images
  • student
    படம்: MOHAMMAD PONIR HOSSAIN/Reuters 

பங்களாதேஷ்: அரசாங்கத்தைக் குறைகூறும் கருத்துகளை வெளியிட்ட மாணவர் அடித்துக் கொலை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

பங்களாதேஷில், அரசாங்கத்தைக் குறைகூறும் கருத்துகளை இணையத்தில் வெளியிட்ட கல்லூரி மாணவர் ஒருவர், விடுதியில் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்ரார் பஹது (Abrar Fahad) என்னும் அந்த 21 வயது மாணவர், இந்தியாவுடனான தண்ணீர்ப் பகிர்வு உடன்பாடு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விமர்சித்து இணையத்தில் எழுதியிருந்தார்.

அதன் காரணமாக அவர் ஆளும் அவாமி லீக் கட்சியின் இளையர் பிரிவைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

டாக்காவிலுள்ள பங்களாதேஷ் பொறியியல் கல்லூரியில் பயின்றுவந்த அவர், மாண்டு போவதற்குச் சுமார் நான்கு மணி நேரம் முன்னர் வரை பலவிதங்களில் தாக்கப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பஹது, கடுமையான தாக்குதலால் மாண்ட தகவலை, டாக்கா காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

மாணவர் விடுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில், பஹதின் உடலைச் சிலர் தூக்கி வருவது பதிவாகியுள்ளது.

அந்தக் கொலையின் தொடர்பில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு சந்தேகநபர்களைக் காவல்துறை தேடிவருகிறது.

பஹது மரணம் குறித்து விசாரணை நடத்தியதாகக் கூறியுள்ள அவாமி லீக் கட்சியின் இளையர் பிரிவு, 11 உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

அந்தப் பிரிவு, மாணவர்களைத் துன்புறுத்துவதாகவும் அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் பரவலாகக் குறைகூறப்பட்டு வருகிறது.


Top