Images
  • indo
    (படம்: AFP/Adek Berry)

இந்தோனேசியா: லஞ்சம் வாங்கியதற்காக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு 7 ஆண்டுச் சிறை

இந்தோனேசியாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் இமாம் நராவி (Imam Nahrawi) 800,000 டாலர் கையூட்டு வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

46 வயது நராவி, இந்தோனேசிய விளையாட்டு மன்றம் வழங்கும் மானியங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

விசாரணையின் முடிவில் அவருக்கு இன்று, 7 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், 4 ஆண்டுகளுக்கு அவர் எந்தவிதமான அரசாங்கப் பொறுப்பை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நராவியால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட 1.3 மில்லியன் டாலர் இழப்பைத் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அவர் அந்தத் தொகையைச் செலுத்தவில்லை என்றால், அவரது சொத்துகள் ஏலத்தில் விடப்படும்.

இருப்பினும் நராவி, தாம் குற்றம் புரியவில்லை என்று வலியுறுத்தி வருகிறார்.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவரது வழக்குரைஞர் கூறியுள்ளார்.  

Top