Images
  • Delhi Rape
    (படம்: AP)

புதுடில்லி பாலியல் பலாத்காரம்: 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்

புதுடில்லியில் ஒரு மாணவியை, 2012ஆம் ஆண்டு கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்த நான்கு ஆடவர்களும் தூக்கிலிடப்படுவதை, இந்திய உச்ச நீதி மன்றம் இன்று (ஜன 14) உறுதிசெய்துள்ளது.

மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கு 4 குற்றவாளிகளும் செய்திருந்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய எவ்விதமான ஆதாரமும் இல்லையென்பதால், தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவை, மாணவியின் குடும்பத்தார் வரவேற்றனர்.

இனி குற்றவாளிகள், இந்திய அதிபருக்குக் கருணை மனு அனுப்புவது ஒன்றே இறுதி வாய்ப்பு.

நான்கு ஆடவர்களுக்கும் இம்மாதம் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு, மரணதண்டனை நிறைவேற்றப்படுமெனக் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுத் தாக்கப்பட்டு மாண்ட சம்பவம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர்பில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு சந்தேக நபர் 2013ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குள் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொருவர் குற்றம் நடந்தபோது 17 வயதுடையவர் என்பதால், சீர்திருத்த நிலையத்தில் 3 ஆண்டுகள் இருந்த பிறகு 2015இல் விடுவிக்கப்பட்டார்.


 

Top