Images
  • cambodia
    (படம்: AFP / TANG CHHIN Sothy)

கம்போடியா: ஒரே நாளில் 730 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

கம்போடியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் மேலும் 730 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கையை விடக் கூடுதலானோர் பாதிக்கப்படுவதால், நிலைமையைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக கம்போடியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கம்போடியாவில் இதுவரை 14,520 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 103 பேர் மாண்டனர்.

தொடர்ந்து சுகாதாரத்தைக் கடைப்பிடித்து, பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுமாறு கம்போடியத் தொற்று நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

வீட்டை விட்டு எங்கும் செல்லவேண்டாம் என்றும், நாட்டிலும், உலகிலும் கிருமிப்பரவல் மோசமாகிக்கொண்டிருப்பதாகவும், அது கூறியது.

கம்போடியத் தலைநகர் நோம் பென் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வரும் 5ஆம் தேதிவரை முடக்கம் நடப்பிலுள்ளது.

"அபாயம் அதிகமுள்ள பகுதிகள்" என அடையாளம் காணப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.  

Top