வீட்டிலேயே சிகிச்சையளியுங்கள் - COVID-19 சம்பவங்களின் அதிகரிப்பால் கம்போடியப் பிரதமர் புது உத்தரவு
கம்போடியாவில் COVID-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இடமில்லை.
அதனால் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் சென் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளிக்குமாறு சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளிலேயே மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கம்போடியாவில் அண்மைக்காலம் வரை நோய்ப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.
ஆனால் பிப்ரவரி மாதத்திலிருந்து அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 6 வாரத்தில் மட்டும் 22 பேர் நோய்த்தொற்றால் மாண்டனர். 2,824 பேர் பாதிக்கப்பட்டனர்.
தற்போது சுமார் 1,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நாட்டுப் பயணக் கட்டுப்பாடுகளையும் கம்போடியா விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறுவோருக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Reuters