Images
  • train cafe
    (படம்: AFP/Tang Chhin Sothy)

காப்பிக் கடையாக மாறிய கம்போடிய ரயில்

எங்கும் செல்லாத ரயில் பயணத்துக்கு நீங்கள் செல்வீர்களா?

ஆம், கம்போடியாவில் காப்பிக் கடையாக மாறிய ரயிலைக் காணப் பலரும் செல்கின்றனர்.

COVID-19 நோய்ப்பரவல் சூழலில், கம்போடியாவில் ரயில் பயணம் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ரயில் பயணங்களை வெகுவாக ரசிப்போர், புனோம் பென் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில் வண்டியில் அமைந்திருக்கும் காப்பிக் கடையைக் காணச் செல்லலாம்.

3 வார முடக்கநிலைக்குப் பிறகு, அதிகாரிகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர்.

19 வயது மாணவி சான் தோல் (Chan Thol), தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த ரயில் காப்பிக் கடைக்குச் செல்வது வழக்கம்.

பல வாரங்கள் வீட்டிலேயே இருந்தபின், இது ஒரு மகிழ்ச்சியான மாற்றம் என்கிறார் அவர்.

"நான் ஓய்வுக்காக இங்கு வருவேன். காப்பியைக் குடித்தவாறு என் நண்பர்களுடன் படங்களை எடுத்து பொழுதைக் கழிப்பேன்" என்று அவர் கூறினார்.

அது, அவரது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

ரயிலைக் காப்பிக் கடையாக மாற்றியது புதுமையான யோசனை என்று 27 வயது சே சொகுனாஃபோர்ஸ் (Se Sokunaphors) கூறினார்.

ரயில் நிறுவனத்துக்கு ஓரளவு வருமானத்தை ஈட்டுவதற்காகவும், நோய்த்தொற்றின்போது ஊழியர்களுக்கு வேலை வழங்கவும் ரயில் வண்டி காப்பிக் கடையாக மாற்றப்பட்டது.

அழுக்குப் படிந்த பழைய இருக்கைகளை மாற்றிப் புதிய வசதியான இருக்கைகளும் சிறிய மேசைகளும் மட்டும் போடப்பட்டு, ரயில் பெட்டி, காப்பிக் கடையாக மாற்றப்பட்டது.

-AFP/ad 

Top