Images
  • corona (3)
    (படம்: AFP/STR)

'சீனாவில் புதிய COVID-19 கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்தாலும் அலட்சியம் கூடாது': உலகச் சுகாதார நிறுவனம்

சீனாவில் பரவிவரும் COVID-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் கடந்த சில நாள்களாகக் குறைந்து வருகிறது.

ஹுபெய் மாநிலத்துக்கு வெளியே, கடந்த எட்டு நாட்களில் COVID-19 கிருமித்தொற்றுக்கு யாரும் ஆளாகவில்லை.

ஹுபெய் மாநிலத்திலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக அதிகரிக்கவில்லை.

எனவே, நிலைமை ஓரளவுக்குச் சீராகி வருவதாக சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

எனினும், கூடுதல் எச்சரிக்கையுடன் அதைக் கவனிக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதற்காக நிலைமைச் சரியாகிவிட்டதாக சொல்லிவிட முடியாது என நிறுவனம் தெரிவித்தது.

COVID-19 கிருமித்தொற்று வேறு விதத்தில் வெளிப்படவும் சாத்தியம் உள்ளது என நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

அது, அனைத்துலக அளவிலான அபாயம் என்றார் அவர்.

மேலும், பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகளே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுப்பட்டுக்குள் இருப்பதற்குக் காரணம் என்று சீனாவின் நெருக்கடி நிலைக்கான தலைவர் கூறினார்.

எனவே, கிருமித்தொற்று முற்றிலுமாக அடங்கிவிட்டது என்று இப்போதைக்குக் கூறிவிட முடியாது என்றார் அவர்.

கிருமித்தொற்றுக்கு சீனாவில் இதுவரை 1,100க்கும் அதிகமானோர் பலியாகியதோடு சுமார் 44, 600 பாதிக்கப்பட்டனர்.

Top