Images
  • mosques
    (படம்: AFP/Sam McNeil)

பள்ளிவாசல் இடிக்கும் பணியை ஒத்திவைத்திருக்கும் சீனா

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றை இடிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பள்ளிவாசல் இடிக்கப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, அதிகாரிகள் அதை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாய்க் கூறப்படுகிறது.

சீனா முழுவதும் சமய சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருமித்தக் கருத்துக் கொண்டவர்களாக மக்களை மாற்றும் முயற்சியின் ஓர் அங்கம் அது என்ற பரவலான கருத்து நிலவுகிறது.

முஸ்லிம்களின் சமய நம்பிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளிவாசலை இடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிங்ஸியா வட்டாரத்தின் வெய்ஸோ நகரில் உள்ளது பள்ளிவாசல்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசல் முன் கூடிநின்று ஆர்ப்பாட்டம் செய்யும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாய் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் பள்ளிவாசலுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்றனர் சிலர்.

எதிர்ப்பைத் தெரிவிக்க சீனாவின் மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களும் நகருக்கு வந்திருக்கின்றனர்.

அதனையடுத்து அந்த வட்டாரத்தில் இணையக் கட்டமைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சீனாவில் சுமார் 23 மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். சீனாவின் 5 அங்கீகரிக்கப்பட்ட சமயங்களில் இஸ்லாமும் ஒன்று.

ஆனால் சீனப் பாரம்பரிய கலாசாரத்தையும் பண்புகளையும் பின்பற்றுவோம் எனும் போக்கில், சீன அரசாங்கம் அண்மை நாட்களாக மற்ற சமய நம்பிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதாய்க் குறைகூறப்பட்டுவருகிறது.
 

Top