Images
  • china airlines
    (படம்: Reuters)

சீனாவில் வீசிய சூறாவளி - 100க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து

சீனாவின் ஹைனான் (Hainan) வட்டாரத்தில் Lionrock சூறாவளி கரையைக் கடந்தபிறகு 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில், படகுச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

இந்த ஆண்டில் சீனா எதிர்கொண்ட 17ஆவது சூறாவளி Lionrock.

தென்சீனக் கடலில் சூறாவளி உருவாகும் முன்னர் அந்த வட்டாரத்தில் கடுமையான மழை பெய்ததால் சில ஆறுகளின் கரைகள் உடைந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

Lionrock சூறாவளி தற்போது ஹாங்காங்கை நெருங்குகிறது. அங்கு பள்ளி வகுப்புகளும், படகு, பேருந்துச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் சேவைக்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.

புயல், மழை எச்சரிக்கை தளர்த்தப்படும் வரை சமூகத் தடுப்பூசி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்.

அரசாங்க மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.

கடுமையான மழை, காற்று காரணமாக, கட்டுமானத் தளத்தின் சாரக்கட்டு சரிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் மாண்டார். 

Top