Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் COVID-19 தடுப்பூசி போடும் பணி நாளை ஆரம்பம்...தடுப்பூசி போட்டுக் கொள்ள மலேசியர்கள் தயாரா?

COVID-19 தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா சென்று சேர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -

(நிருபர்: தனலெட்சுமி புவனேந்திரன்)

COVID-19 தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா சென்று சேர்ந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவலை முறியடிக்கும் முயற்சிகள் ஓராண்டாய் நீடிக்கும் வேளையில், மலேசியா தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளது.

COVID-19 தடுப்பூசி போடும் திட்டம் (பிப்ரவரி) இம்மாதம் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தொடங்கவிருந்தது.

ஆனால், இரண்டு நாள்கள் முன்னதாக நாளை 24ஆம் தேதியே அதைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மலேசிய மருத்துவர் சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி தெரிவித்தார்.

மலேசியாவிலுள்ள ‘செய்தி’ நிருபர் தனலெட்சுமி புவனேந்திரனுக்குச் சிறப்புப் பேட்டியளித்தார் டாக்டர் சுப்ரமணியம்.

முதல் கட்டத்தில் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கின்றனர்?

மருத்துவத்துறை சார்ந்தவர்கள் உட்பட ஐந்து லட்சத்துக்கும் அதிகமான முன்களப் பணியாளர்களுக்கு, முதல் கட்டமாகத் தடுப்பூசிகள் போடப்படவிருக்கின்றன.

ஆசிரியர்களையும், நிருபர்களையும் முதற்கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் இணைத்துக் கொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.

அவர்கள் தவிர்த்து துப்புரவுப் பணியாளர்களையும் அரசாங்கம் முதற்கட்டத் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ள வேண்டும். கிருமிகள் எளிதில் பரவக்கூடிய பணிகளை மேற்கொள்வதால் துப்புரவுப் பணியாளர்களுக்கும் முதலில் தடுப்பூசி போடுவது அவசியம். அரசாங்கம் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் எனப் பெரிதும் நம்புகிறோம்.

பெரும்பாலான மலேசியர்களுக்கும், மலேசிய பிரஜை அல்லாதவர்களுக்கும் இரண்டாம் கட்டத்தின் போது, தடுப்பூசி போடப்படும். இது தன்னார்வ அடிப்படையிலான திட்டம் என்பதால், பொது மக்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குப் பதிந்து கொள்ள வேண்டும்.

COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கட்டாயப்படுத்தாமல், விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு நாங்களும் உடன்படுகிறோம்.

அதேசமயம், இத்தடுப்பூசியைப் போட வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்த, அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி தொடர்பான போதிய தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அதைப் போட்டுக் கொள்வதில் மக்களுக்கு நிச்சயம் எந்தத் தயக்கமும் இருக்காது.

COVID-19 தடுப்பூசி தொடர்பில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? தடுப்பூசி போட்டுக் கொள்ள அவர்கள் தயங்காமல் முன்வருவார்களா?

தற்போதைக்கு உலகம் முழுவதும் பெரும் மிரட்டலாக இருப்பது இந்த COVID-19 கொள்ளை நோய் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்.

இந்த நோயில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒரே கவசம் இப்போதைக்கு இந்தத் தடுப்பு மருந்து தான். எனவே சிலருக்குத் தயக்கம் இருந்தாலும் கூட, மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள நிச்சயம் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

மக்களுக்கான தடுப்பூசிகளை அங்கீகரிப்பதில் மலேசிய சுகாதார அமைச்சு கடுமையான போக்கையே கடைபிடிக்கிறது. இத்தடுப்பூசி உலக நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. NPRA எனும் தேசிய மருந்தக விதிமுறை நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே இத்தடுப்பு மருந்துகள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே அரசாங்கம் அங்கீகரித்திருக்கும் COVID-19 தடுப்பூசியின் நம்பகத்தன்மை தொடர்பில் மக்களுக்கு ஐயம் இருக்காது என நாங்கள் நம்புகிறோம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்