Images
  • Dog
    படம்: Bernama

மலேசியாவில் அம்பெய்து நாயைக் கொன்ற நபரைத் தேடும் காவல்துறை

மலேசியாவின் லங்காவி தீவிலுள்ள Kuah நகரில், அம்பு எய்து ஒரு நாயைக் கொன்ற தனிநபரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Dayang Bay என்னும் வட்டாரத்திலுள்ள 24 மணிநேரச் சில்லறை விற்பனைக் கடைக்கு அருகே அந்தச் சம்பவம் நேர்ந்தது.

உடலில் இரண்டு அம்புகள் பாய்ச்சப்பட்ட நிலையில் மாண்டு கிடந்த நாயின் நிழற்படத்தை Facebook-இல் பார்த்த பெண்மணி ஒருவர், நேற்று மாலை அதுபற்றிக் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கே கூடியிருந்தவர்கள் நாயின் உடலைக் கடலுக்குள் வீசி அப்புறப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

அதைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், நாயின் உடலைத் தனியார் விலங்குநல மருந்தகத்துக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அது வீட்டு நாயா, தெரு நாயா என்பது தெரியவில்லை. யாரும் தங்களது நாய் காணாமற்போனதாகப் புகார் செய்யவில்லை.

விலங்கு வதைக்கு எதிரான சட்டத்தின்கீழ், அந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

நாயின் படத்தை வெளியிட்ட Facebook கணக்கின் உரிமையாளரும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் முன்வந்து கூடுதல் தகவல்களை அளிக்கும்படிக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

Top