லாரியின் பின்புறத்தில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட நாய்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஒரு நாய் லாரியின் பின்புறத்தில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் சினமடைந்துள்ளனர்.
அதனை அடுத்து, ஆடவர் ஒருவர் லாரி ஓட்டுநரின் செயலுக்கு எதிராக காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார்.
அது பற்றி, மலேசியக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காணொளியில் உள்ள லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அந்த லாரியைத் தம் 58 வயது தந்தை ஓட்டிச்சென்றதாகவும் அந்த நாயை திக்குத் தெரியாத இடத்தில் விடுவதற்கு அவர் திட்டமிட்டதாகவும் லாரி உரிமையாளர் கூறியிருக்கிறார்.
வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய், தவறிக் கீழே விழுந்ததையும், அது தரையில் இழுத்து வரப்பட்டதையும் தாம் கவனிக்கவில்லை என்று விசாரணையின்போது லாரி ஓட்டுநர் கூறியிருக்கிறார்.
அது குறித்து மலேசியக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

