Images
  • baby (1)

ஒரே நேரத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற நைஜீரியப் பெண்ணின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்ட துபாய் பட்டத்து இளவரசர்

துபாயின் பட்டத்து இளவரசர், ஒரே நேரத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த நைஜீரியப் பெண்ணின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சுலியாத் அதுல்கரீம் என்ற அந்த 29 வயதுப் பெண், ஜூலை 1ஆம் தேதி 2 ஆண் குழந்தைகளுக்கும் 2 பெண் குழந்தைகளுக்கும் தாயானார்.

அவசர அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளும் சுமார் 2 மாதங்கள் முன்கூட்டி பிறந்தன.

அதனால், அவை நான்குக்கும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மருத்துவக் காப்பீடு இல்லாததால், மருத்துவச் செலவுகள் 148,000 வெள்ளிக்கும் (108,000 டாலர்) மேல் ஆனதாகக் குழந்தைகளின் தந்தை கூறினார்.

துபாயில் உள்ள நைஜீரிய சமூகத்தினரும் மற்ற சிலரும் சுமார் 15,800 வெள்ளி (11,500 டாலர்) திரட்டினர்.

ஏற்கனவே இந்தத் தம்பதியைப் பற்றி CNN ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதைப் படித்து நெகிழ்ந்துபோன துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷீட் அல் மக்தூம் அவர்களின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக CNN கூறியது.

தன் மனைவி 4 குழந்தைகளுடன் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே கவலையாக இருந்த அப்துல்கரீமுக்கு மிக்க மகிழ்ச்சி.

4இல் 2 பிள்ளைகளுக்குப் பட்டத்து இளவரசரின் பெயரையும் 1 பெண் குழந்தைக்கு மருத்துவமனையின் பெயரான லதீஃபா என்றும் பெயர்சூட்டப்போவதாக அந்தத் தம்பதி தெரிவித்தனர்.

அவர்கள், செலவுகளைக் கட்டுப்படுத்த நைஜீரியாவில் பிரசவம் பார்க்க முடிவெடுத்திருந்தார்கள்.

ஆனால், கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. 

Top