Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Musang King டுரியான்களால் பணம் கொழிக்கும் மலேசிய நகரம்

பஹாங் மாநிலத்தின் ரவுப் நகரம்,1900களின் தொடக்கத்தில், தங்கத்திற்குப் பெயர் பெற்றிருந்தது.

வாசிப்புநேரம் -

பஹாங் மாநிலத்தின் ரவுப் நகரம்,1900களின் தொடக்கத்தில், தங்கத்திற்குப் பெயர் பெற்றிருந்தது.

மணலை அள்ளி அதிலிருந்து தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர் பலர்.

இப்போது தங்கம் குறைந்து விட்டாலும் அந்த வட்டாரம் இன்னொரு மதிப்புமிக்க பொருளுக்குப் பெயர் பெற்றுள்ளது.

அதுதான் மூசாங் கிங் வகை டுரியான்.

அந்த வகை டுரியான்களை அறுவடை செய்ய சரியான தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ளது ரவுப் நகரம்.

அதனால் மலேசியாவின் மூசாங் கிங் நடுவம் என அது புகழ் பெற்றுள்ளது.

கடல் கடந்தும் பிரபலமாக விளங்குகிறது அந்த வகை டுரியான்.

மாவ் ஷான் வாங் என்றும் அழைக்கப்படும் அது சீனா, ஹாங்காங், மக்காவ், சிங்கப்பூர் போன்ற இடங்களில் அதிகப் பிரபலம்.

அதன் சுவையும் பளபளவென்ற தோற்றமும் வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்கின்றன.

இதன் காரணமாக மூசாங் கிங் ஏற்றுமதியில் ஈடுபடும் ரவுப் தோட்டக்காரர்கள் காட்டில் மழை.

அவர்களில் சிலர் மலேசியாவின் ஆகப் பணக்காரப் பழத் தோட்டப் பண்ணையாளர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

10 வருடத்துக்கு முன் டுரியான் மரங்களை வளர்க்க ஆரம்பித்த திரு. ஜோவி கோங் தற்போது இரண்டு தரை வீடுகளின் சொந்தக்காரர்.
ஒன்று ரவுப்பில், மற்றது கோலாலம்பூரில்.

ஆடம்பரக் கார்களை ஓட்டும் அவருக்கு மொத்தம் 85 ஏக்கர் அளவுள்ள இரண்டு டுரியான் தோட்டங்கள் உள்ளன.

ரவுப் மற்ற மலேசிய நகரங்களைப் போல் இல்லை. அங்கு வசிப்போர் பணக்காரர்கள், அவர்களின் வாங்கும் சக்தி அதிகம், இதற்கெல்லாம் காரணம் டுரியான்தான் என்கிறார் 44 வயது திரு. கோங்.

ரவுப்பில் உள்ள பெரும்பாலான தோட்ட உரிமையாளர்கள் செல்வந்தர்கள் என்று அவர் கூறுகிறார்.

அவர்களின் சொத்து, நிலம் ஆகியவற்றின் மதிப்பை வைத்து அதனைச் சொல்கிறார்.

சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு டுரியான் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் தமக்குச் சில நூறாயிரம் ரிங்கிட் வருமானம் கிடைப்பதாகத் திரு. கோங் குறிப்பிடுகிறார்.

அதோடு மட்டுமில்லை. தமது தோட்டத்துக்கு புதிய டுரியான்களை ருசிக்கவரும் சுற்றுப்பயணிகளிடமிருந்து ஆளுக்கு 50 ரிங்கிட் வசூலிக்கிறார்.

பிரபல Fraser Hill விடுமுறைத் தலத்தின் அடிவாரத்துக்கு அருகே உள்ள அவரது 5S Durian Station தோட்டத்துக்கு ஒவ்வொரு முறையும் சுமார் 200 பேர் பேருந்தில் வந்து இறங்குகின்றனர்.

வாரத்துக்கு இருமுறை அவ்வாறு நடக்கிறது. சுற்றுப்பயணிகளில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

சீனாவின் ஈடுபாடு அதோடு நின்றுவிடவில்லை.

மூசாங் கிங் டுரியான்களுக்கு அதிக விலை கொடுக்க சீனர்கள் முன்வருவது தங்கள் ஆதாயத்தைப் பெருக்க உதவுவதாகத் தோட்டக்கார்கள் கூறுகின்றனர்.

முன்பு கிலோகிராமுக்கு 25 ரிங்கிட் கொடுத்த இறக்குமதியாளர்கள் இப்போது 45 ரிங்கிட்வரை கொடுக்க முன்வருகின்றனர்.

ரவுப்பிற்கு மேலும் சீனப் பயணிகளை ஈர்க்க பஹாங் மாநில அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்நகரின் அனைத்துலக டுரியான் விழாவில் பேசிய மாநில முதலமைச்சர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், சீனப் பயணிகளுக்கு உகந்த நகரமாக ரவுப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு 700 ஆயிரம் சீனப் பயணிகள் அங்கு வந்தனர். அந்த எண்ணிக்கையை ஒரு மில்லியனாக்குவது இலக்கு என்றார் அவர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்